சீனாவின் லாங் மார்ச் 7ஏ ராக்கெட் வெடித்து சிதறியது!
|
லாங் மார்ச் 7ஏ ராக்கெட் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறிய சம்பவம் சீனாவின் விண்வெளி துறைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் தெற்கிலுள்ள ஹைனான்(Hainan) தீவின் வென்சாங்(Wenchang) விண்வெளி தளத்தில் இருந்து பெய்ஜிங் நேரப்படி திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு அடுத்த தலைமுறை லாங் மார்ச் 7ஏ(Long March 7A) ராக்கெட் புறப்பட்டது. உயர் பூமி சுற்றுப் பாதையை நோக்கி சென்று கொண்டிருந்த ராக்கெட் துரதிர்ஷ்டவசமாக புறப்பட்ட 90 வது நிமிடத்தில் வெடித்து சிதறியது. |
|
இதன் காரணமாக ராக்கெட்டில் இருந்த ChinaSat-4B தகவல் தொடர்பு செயற்கைக்கோளும் முழுமையாக வெடித்து சிதறி சேதமடைந்தது. ராக்கெட் ஏவுதலை ஏவுதளத்திற்கு அருகில் இருந்து பார்த்தவர்கள் இந்த காட்சிகளை தங்களுடைய செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் லாங் மார்ச் 7ஏ ராக்கெட்டில் ஏற்பட்ட தீவிர கோளாறு காரணமாகவே அதன் அவசர கால பாதுகாப்பு அமைப்புகள் தானாக செயல்பாட்டுக்கு வந்து ஒட்டுமொத்த பயணத்தையும் அழித்து இருக்கலாம் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். வெடித்து சிதறிய ராக்கெட் பாகங்கள் மற்றும் செயற்கைக்கோள் உதிரி பாகங்கள் தென் சீனக் கடலில் விழுந்து நாசமாகியுள்ளன. விபத்து நடைபெற்ற 3 மணி நேரத்திற்கு பிறகு இந்த தோல்வியை சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான Xinhua உறுதிப்படுத்தி இருப்பதுடன் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த திட்டம் தோல்வியடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதே சமயம் விபத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய தற்போது விசாரணையானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. |