யாழ் இளைஞர்களின் பொறியில் மாட்டி வசமாக சிக்கிய மோசடி முகவர்கள் !
யாழ் மாவட்டம் கொடிகாமம் பொலிஸ் பிரிவில் வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற இளைஞர்களை ஏமாற்றிய முகவர்களை , சாவகச்சேரி இளைஞர்கள் பொறி வைத்து பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு நடந்த இந்த பரபரப்பு சம்பவத்தில், கொழும்பிலிருந்து வந்த முகவர்கள் உள்ளிட்ட மூவரை, பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தடுத்து வைத்துள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பொலிசார் சென்ற போது, இளைஞர்கள் தப்பிச் சென்ற நிலையில் ஆட்களை அனுப்பும் முகவர்கள் மூவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் விடுதி நடத்தும் ஒருவர் உள்ளிட்ட இரண்டு பேர் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அந்த மோசடியாளர்களிடம் தென்மராட்சி பிரதேசத்தில் மட்டும் 20 இற்கும் அதிகமான இளைஞர்கள் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மோசடியாளர்கள் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் 1 இலட்சம் ரூபாவை முதலில் பெற்றுள்ளனர். வெளிநாட்டுக்கு செல்ல முயல்பவர்களிடம், பணத்தை வங்கி மூலம் அல்லாமல் நேரடியாகபெறும் அவர்கள், தமது வாகனத்தில் வீடுகளிற்கு நேரில் சென்று பணத்தை பெற்று, வெளிநாடு செல்லவுள்ளவரையும் ஏற்றிச் சென்று விடுவார்கள்.
அதன் பின்னர் அவர்களை கொழும்பிலுள்ள தமது விடுதியில் சுமார் இரண்டு மாதங்கள் தங்க வைத்திருப்பார்கள். இதற்கான செலவையும் குறிப்பிட்ட இளைஞன் செலுத்த வேண்டும். ஆனால் இந்த காலப்பகுதியில் அவர்கள் விடுதியிலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். பின்னர் அவர் ருமேனியாவிற்கு அனுப்பப்பட்ட பின்னர் முகவர்கள் தொடர்பை துண்டித்து விடுவார்கள். அதன் பின்னர் அங்கிருந்து இளைஞர்கள் நாடு கடத்தப்படுவார்வாகள் எனவும் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் சாவகச்சேரியை அண்மித்த பகுதியிலுள்ள இளைஞன் ஒருவர் உணவகம் நடத்தி வந்த நிலையில் வெளிநாடு செல்ல முயன்றார். இதர்காக கொழும்பை சேர்ந்த அந்த இரண்டு முகவர்களிடமும் அவர் சுமார் 6 இலட்சம் ரூபா பணத்தை கொடுத்துள்ளார். எனினும், பணத்தை நேரடியாக கொடுத்ததால் அவரிடம் ஆவணங்கள் இருக்கவில்லை.
எனினும், முன்னெசரிக்கையாக இளைஞர் தொலைபேசி உரையாடல் பதிவுகளை வைத்திருந்தார். இந்த நிலையில் வெளிநாடு செல்ல முயன்ற அந்த இளைஞர் , ருமேனியாவுடன் அந்த இளைஞனும் திரும்பி வந்தார். எனினும் தாம் வாங்கிய பணத்தை முகவர்கள் திருப்பிக் கொடுக்க மறுத்து விட்டனர். ஓரிரு தினங்களின் முன்னர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற இளைஞன், சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்ய முயன்ற போதும், போதிய ஆதாரங்களில்லாததால் முறைப்பாட்டை பொலிசார் பெற்றுக்கொள்ளவில்லையென கூறப்படுகிறது.
இதையடுத்து, இரண்டு மோசடி பேர் வழிகளையும் பொறி வைத்து பிடிக்க அந்த இளைஞன் திட்டமிட்டார். இதேவேளை கொழும்பு முகவர்களிற்கு முகவராக வரணியை சேர்ந்த முதியவர் ஒருவர் செயற்பட்டுள்ளார். தென்மராட்சியில் 5 இளைஞர்கள் வெளிநாடு செல்லவிரும்புவதாக அந்த முதியவரை இளைஞர்கள் அணுகியுள்ளனர்.
வரணி முதியவர், கொழும்பு முகவர்களிற்கு தகவல் கொடுக்க “அப்படியா… நல்லது டிரெக்டாக பிரான்ஸ் அனுப்பி வைக்கலாம்“ என உற்சாகமாக வாக்களித்து, பிரான்ஸ் செல்ல தயாராக இருக்குமாறும், நேற்று மாலை 6 மணிக்கு ஏற்ற வருவதாகவும் கொழும்பு முகவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து நேற்று மாலை 6 மணிக்கு கொழும்பு முகவர்கள் தமது வாகனத்தில் வந்தபோது அவர்களுடன் வரணி முகவரும் இருந்துள்ளார். இதனையடுத்து இளைஞன் ஒருவர் வாகனத்தில் ஏறி, மற்றொருவரை ஏற்றுவதாக கூறி, வரணியில் ஆட்களற்ற வீடொன்றிற்கு அழைத்து சென்றார். அங்கு இன்னொரு ஒரு இலட்சம் ரூபா மாட்டிய சந்தோசத்தில் சென்ற முகவர்களை அங்கிருந்த இளைஞர்கள் மடக்கிப் பிடித்து வீட்டில் தடுத்து வைத்தனர்.