அனுர அரசாங்கத்தை பல தசாப்தங்களுக்கு யாராலும் அசைக்க முடியாது!
|
நாட்டிலிருந்த குற்றக்கும்பல் அரசியல் கட்டமைப்பை நாம் அகற்றியிருக்காவிடின் பிரபுத்துவ வர்க்கத்தினருக்கும், முதுகெலும்பற்ற அரசியல்வாதிகளுக்கும் தலைவணங்கி வாழும் நிலையே தொடர்ந்திருக்கும். ஆனால் இப்போது நிலைமை மாறியுள்ளது. அவர்கள் விரட்டியடிக்கப்பட்டு வலுவானதொரு அடித்தளம் இடப்பட்டுள்ளது. ஆகையால் தற்போதைய அரசாங்கத்தை மேலும் பல தசாப்தங்களுக்கு யாராலும் அசைக்க முடியாது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார். |
|
அண்மையில் நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்த அவர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். கடந்த இரு தேர்தல்களின் போது மக்களுடன் இணைந்து, உலகிலேயே மிகக் கொடூரமான குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், கொள்ளையர்கள் மற்றும் ஊழல் வாதிகளால் சூழப்பட்டிருந்த அரசியல் கும்பலை விரட்டியடித்தோம். தினமும் மாலைச் செய்திகளில் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும் கொடூரக் குற்றங்களின் தகவல்களே இதற்குச் சான்றாகும். அச்சமடைந்த குற்றவாளிகள் இன்று சட்டத்திற்குப் பயந்து ஒளிந்து வாழ்கின்றனர். நாம் எவ்வித குற்றங்களிலும் ஈடுபடாததாலும், நாட்டைப் பாதுகாக்கும் நோக்கில் நமது உழைப்பையும் தியாகத்தையும் அர்ப்பணித்ததாலும் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. கடந்த 22 மாதங்களாக எமது உறுப்பினர்கள் நாட்டின் எதிர்காலத்திற்காகவும், இளைஞர்களுக்காகவும் அர்பணிப்போடு உழைத்து வருகின்றனர். மக்கள் வழங்கிய பலமும் தைரியமுமே ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் மிகப்பெரிய சக்தியாக அமைந்தது. சமீபத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது, அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பிலும், அதன் தேவையையும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார். நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எவ்வித அபாயத்தையும் எதிர்கொள்ளத் தான் தயார் என்றும், மக்கள் நலனுக்காகச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது பதவி விலக நேரிட்டாலும் அதற்கும் தயார் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார். நான் நேசிக்கும் மக்களுக்காகவே தான் இந்த நாட்டை பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார். இவ்வாறானதொரு தலைவரை மக்களாகிய நீங்களே உருவாக்கியுள்ளீர்கள். கடந்த காலங்களில் போதைப்பொருள் அல்லது ஊழலுக்கு எதிராகப் பேசினால் வெள்ளை வேன் கடத்தல் அல்லது நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு உயிராபத்தும் ஏற்பட்டிருக்க கூடும். அத்தகைய தொரு சூழலை மாற்றி, மக்கள் நலன் சார் அரசாங்கமொன்றை நாம் கட்டியெழுப்பியுள்ளோம். மக்களுடன் இணைந்து கட்டியெழுப்பப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின் மூலம் நாட்டிற்குப் புதியதொரு மாற்றம் கிடைத்துள்ளதுடன், வலுவானதொரு எதிர்காலம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார். |