நிறுத்தப்பட்ட திட்டங்கள் மீண்டும் ஆரம்பம்
கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால், கடந்த காலத்தில் இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் உள்ளிட்ட ஜப்பானிய உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவியின் கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய தூதுக்குழுவின் தலைவர் கலாநிதி இசுமி ஹிரோடோ தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் கைகோர்த்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவுடன் இணைந்து மிகக் குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை எட்டியதன் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் மீது சர்வதேச சமூகம் கொண்டுள்ள நம்பிக்கையே பிரதிபலிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை வருகை தந்துள்ள வீடமைப்பு, நிர்மாண மற்றும் நகர்ப்புறத் துறைகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஜப்பானிய உயர்மட்டக் குழு நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தது.
இலங்கையில் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவியின் கீழ் ஜப்பானினால் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிப்பது மற்றும் இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பிலும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இலங்கை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் குறித்தும் சர்வதேச நாணய நிதியத்துடன் செயற்பட்டு உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவுடன் இணைந்து மிகக் குறுகிய காலத்தில் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டமை தொடர்பிலும் ஜப்பான் பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு தமது பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
கடன் மறுசீரமைப்புச் செயற்பாட்டின் போது கடன் வழங்குநர்களுடன் கலந்துரையாடல்களை நடாத்துவதற்கு ஜப்பான், இலங்கைக்கு வழங்கிய ஆதரவை நன்றியுடன் நினைவு கூர்ந்த ஜனாதிபதி, கல்வி, விவசாய நவீனமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தி நெருக்கமான உறவுகளை ஏற்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார். அதற்காக தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ள ஜப்பானிய ஒத்துழைப்பின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களை மீள ஆரம்பிப்பது முக்கியம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.