ஹெய்டிக்கு 1089 படையினரை அனுப்புகிறது அரசாங்கம்!

22.06.2026 08:08:19

வன்முறைக் கும்பல்களின் ஆதிக்கத்தினால் சீர்குலைந்துள்ள கரீபியன் நாடான ஹெய்டியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக, 900 இற்கும் மேற்பட்ட முப்படை வீரர்களையும், விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 189 பொலிஸ் அதிகாரிகளையும் கொண்ட விசேட பாதுகாப்புப் படையணியை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    

 

ஐக்கிய நாடுகள் சபையின் 2793ஆவது தீர்மானத்திற்கு இணங்க, அங்கு செயற்படும் அமெரிக்கா தலைமையிலான 'வன்முறைக் கும்பல் ஒழிப்புப் படைக்கு' ஆதரவளிப்பதற்காகவே இந்த விசேட படைப்பிரிவு அனுப்பப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை இராணுவ வரலாற்றில் முதல்முறையாக, மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்கச் செய்யும் பணிகளுக்காக இராணுவப் பெண் பொறியியலாளர் பிரிவொன்று இந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளமை முக்கிய விடயமாகும்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் தூயகொந்தா தெரிவிக்கையில்,

ஹெய்டிக்கு அனுப்பப்படவுள்ள இலங்கை பாதுகாப்புப் படையினரின் மனித உரிமைகள் தொடர்பான சரிபார்ப்புப் பணிகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. நான் நியூயோர்க் சென்றிருந்த போது ஹெய்டி பிரதமரை நேரில் சந்தித்து கலந்துரையாடியிருந்தேன். இந்நிலையில் எதிர்வரும் வாரங்களில் ஐநா குழுவொன்றின் மூலம் இலங்கை படையணியின் உடற்தகுதி மற்றும் உபகரணங்கள் குறித்த இறுதி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், ஜூலை மாத இறுதிக்குள் அக்குழுவினர் ஹெய்டிக்கு அனுப்பப்படுவார்கள் என்றார்.

அமெரிக்கா மற்றும் கனடாவின் ஆதரவுடன் ஹெய்டி அரசாங்கம் விடுத்த உத்தியோகபூர்வ கோரிக்கையை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையிலேயே இலங்கை படையினர் மேற்படி விசேட பணியில் இணையவுள்ளதோடுஇலங்கை படையணியுடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கண்ணிவெடி பாதுகாப்புடைய 'யுனிபப்பல்' கவச வாகனங்கள் மற்றும் காலாட்படை போர் வாகனங்கள் ஆகியனவும் அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.