சோவியத் காலத்தை மிஞ்சும் ரஷ்யாவின் போர்கால தயார்நிலை!

31.07.2025 06:32:28

சோவியத் காலத்தை மிஞ்சும் அளவிற்கு ரஷ்யாவின் ஆயுத வளர்ச்சித் திட்டம் இயங்கிவருவதாக Kyiv Independent செய்தி நிறுவனம் தகவலளித்துள்ளது. உக்ரைனின் ஆண்டுக்காண தூதர்களுக்கான கூட்டத்தில், உக்ரைனின் ராணுவ உளவுத்துறை தலைவர் கைரிலோ புடனோவ் (Kyrylo Budanov), “ரஷ்யா ஒரு பெரியளவிலான போர் தயாரிப்புக்காக தனது அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகத்தை முழுமையாக இயக்கிவருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

சோவியத் யுகத்திற்குப் பிறகு, ரஷ்யா தற்போது தனது மிகப்பாரிய ஆயுத உற்பத்தி திட்டத்தை தொடங்கியுள்ளது. அடுத்த 11 ஆண்டுகளில் புதிய ஆயுத விநியோகத்துடன் இராணுவப் படைகளை சித்தப்படுத்த கிரெம்ளின் சுமார் 1.1 டிரில்லியன் டொலர் செலவிட திட்டமிட்டுள்ளது என்று கைரிலோ புடனோவ் வெளிப்படுத்தியுள்ளார்.

ரஷ்யா தற்போது மாஸ்கோ மற்றும் லெனின்கிராட் என இரண்டு புதிய ராணுவ மாவட்டங்களை உருவாக்கி, மேலும் பல புதிய பிரிவுகள் மற்றும் படைகளை உருவாக்க திட்டமிட்டு வருகிறது.

"ரஷ்யா, உலகத்தின் தற்போதைய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அமைப்பை மாற்ற முயல்கிறது. குறிப்பாக ஆப்ரிக்காவில் அதன் பிரதிநிதி (Proxy) படைகள் மூலம் தற்காலிக ராணுவ ஆதிக்கத்தை உருவாக்குகிறது" என்று புத்தானோவ் தெரிவித்துள்ளார்.

இது மட்டும் இல்லாமல், ரஷ்யா தற்போது சைபர் தாக்குதல்கள், பொய்யான செய்திகள் மூலம் மாபெரும் நாடுகளின் ஜனநாயகத்தை சிதைக்க முயற்சி செய்கிறது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் உளவுத்துறை தலைவர் கடந்த ஆண்டு ரஷ்யா 2030-க்குள் NATO-வை தாக்கும் திறனுடன் இருக்கும் என எச்சரித்திருந்தார்.

2024-ல், ரஷ்யாவின் பாதுகாப்பு செலவு $462 பில்லியன், இது ஐரோப்பிய நாடுகள் மொத்தமாகச் செலவழிக்கும் $457 பில்லியனைவிட அதிகம்.

ரஷ்யாவின் உள்நாட்டு பேச்சாளர் பெஸ்கோவ், “இப்போது மக்கள் மில்லியன் கணக்கில் ராணுவத்திற்கு ஆதரவு அளிக்கிறார்கள். இது இரண்டாம் உலக யுத்தம் காலத்தை ஒத்ததாகும்” எனக் கூறியுள்ளார்.