சத்தியலிங்கம் எம்.பி. எச்சரிப்பு.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் மீது சுமைகள் அதிகரித்தால் அது கல்வியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் பாடசாலை இடைவிலகல் அதிகரிக்கும் என்று இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
இன்று (25) நடைபெற்ற கல்வி அமைச்சு மீதான பாதீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார், மேலும் அவர் கூறியதாவது,
இலங்கையில் 1944ம் ஆண்டு Dr.C.W.W.Kannangara அவர்களால் முன்மொழியப்பட்ட அனைவருக்கும் இலவசக்கல்வி முறைமை தரம் 1ல் இருந்து பல்கலைக்கழகம் வரை இலவசமாக கல்வியை கற்கக்கூடிய வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதை உறுதிசெய்வதாகும்.
கல்வி ஒவ்வோர் மனிதனுடையதும் அடிப்படை உரிமை, எமது நாட்டில் காணப்படும் இலவசக்கல்வி என்பது அனைவருக்குமான வரப்பிரசாதமாகும்.
இந்த வரப்பிரசாதம் தொடரப்படல் வேண்டும்.
அத்துடன் தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி கற்பதற்கான வாய்ப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன் வெளிப்படைத்தன்மயுடன் கல்வியின் தரம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
அதேவேளை தனியார் கல்வி நிலையங்கள், சர்வதேச பாடசாலைகளை கண்காணிப்பதற்கும் கல்வித்தரத்தை உறுதிப்படுத்துவதற்கும் முறையான பொறிமுறை இல்லாதது மாணவர்களின் எதிகாலத்தை பாதிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.
எனவே அரசாங்கம் இதற்கான பொறிமுறை ஒன்றை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்
எனவே கல்விச்சேவை வளங்களில் காணப்படும் வளப்பங்கீடு அனைத்து பிரதேசங்களிற்கும் சமனாதாக இருக்க வேண்டும்.
குடும்பங்களின் பொருளாதார நிலை அக்குடும்பங்களின் கல்வி வெளிப்பாட்டில் தாக்கத்தை செலுத்துவதை காணக்கூடியதாகவுள்ளது.
எமது நாட்டில் காணப்படும் பொருளாதார வீழச்சிநிலையால் அவதிப்படும் மக்களின்மேல் கல்விகான பொருளாதார சுமை மேலும் அதிகரித்தால் கல்வியில் இருந்து இடைவிலகலை அதிகரிக்கும்.
இன்று பாடசாலை இடவிலகலானது க.பொ.த சா/த ற்கு முன் 16% ஆகவும் க.பொ.த உ/த இற்கு முன் 35% ஆக உள்ளதாகவும் தரவுகள் உள்ளது.
எனவே குறைந்த பொருளாதார பின்ணணியுடன் வாழும் குடும்பங்களில் இருந்து கல்விகற்க வரும் பிள்ளைகளிற்கான பாடசாலை உணவு வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு அவசியமானது.
2026ம் ஆண்டுக்கான பாதீட்டில் கல்விக்கான ஒதுக்கீட்டில் 23 சதவிகிதமே மூலதன செலவினத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் கல்வித்துறையில் பாரிய பௌதிக 2026ம் வருடத்தில் எதிர்பார்க்கமுடியாது
பாதீட்டு ஒதுக்கீடுகளுக்கு அப்பால் தற்போதைய அரசாங்கத்தினால் கல்வி சீர்திருத்தமொன்று முன்மொழியப்பட்டுள்ளது.
இதில் முக்கியமாக நவீன தொழிற்சந்தைக்கு எற்றவாறு பாடசாலைப்பாடவிதானத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதுடன் பாடசாலை நேரத்திலும் சிறிய அதிகரிப்பு செய்யப்படவுள்ளது.
நவீன உலக ஒழுங்கிற்கு ஒத்திசைவாக தொழிற்சந்தைக்கு ஏற்றவாறு சமூகத்தை தயார்படுத்தவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
பல்கலைக்கழக கல்வியை முடித்துவிட்டு அரசாங்க வேலைக்காக மட்டும் எதிர்பார்க்கும் நிலைமையை மாற்றக்கூடிய முறைமை உருவாக்கப்படுதல் வேண்டும்.
இதற்கு தனியார் துறையின் பங்களிப்பு மிகவும் அவசியமானது. நாட்டின் தென்பகுதியில் ஓரளவுக்கேனும் தனியார் தறைகளில் வேலைவாய்ப்ப கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருந்தாலும் வடகிழக்கு மாகாணங்களில் அவ்வாறான புறச்சூழ்நிலைகள் இல்லை.
எனவேதான் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தனியார்துறையினரின் முதலீடுகளை ஆரம்பிக்ககூடியதான வாய்ப்புகளை இந்த அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்க முன்வரவேண்டுமென்று நாங்கள் தொடர்ச்சியாக கோரிவருகின்றோம்.
பாடசாலைக்கல்வி என்பது அனைவருக்கும் அடிப்படையானது.; பல்கலைக்கழக அனுமதி கிடைக்காதவர்களுக்கு தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பொருத்தமான தொழிற்கல்வியினை வழங்கி தொழிற்சந்தைக்கு தயார்படுத்த வேண்டும்.
நாடெங்கிலும் தொழில்சார் பயிற்சிகளை வழங்கும் பல நிறுவனங்கள் இருந்தாலும் அவை தொடர்பான விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் குறைவாகவே காணப்படுகின்றது. எனவே பாடசாலைக்காலத்திலேயே தொழிற்கல்வியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வுகள் செய்யப்படுதல் வேண்டும். என தெரிவித்துள்ளார்.