பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நீக்க வேண்டும்!
நிகழ்நிலை காப்பு சட்டம், பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஆகிய இரண்டையும் நீக்கி இலங்கையில் ஜனநாயகத்தினை உறுதிப்படுத்துவதற்கு சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.
சர்வதேச சமூகம் ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்த சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்கின்ற அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்க வேண்டும்.
மாவீரர் நினைவேந்தல் தினம் அனுஸ்டித்தமைக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சந்தித்தார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் மற்றும் இன்று காலை சிறைச்சாலைக்கு சென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் ஆகியோர் சந்தித்ததுடன் அவர்களுடன் கலந்துரையாடினார்கள்.
கடந்த மாவீரர் நினைவேந்தல் தினத்தன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் குகன் மாஸ்டர் அவரது மகன் உட்பட 11பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே ஆறு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் ஐந்து பேர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று (13) நான்கு பேரை சந்தித்து அவர்கள் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் ஒருவர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்தார்.