அரிசிஇறக்குமதி செய்யும் அவசியம் கிடையாது

26.03.2024 08:04:50

அரிசி தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் தற்போது நாடு அரிசியில் தன்னிறைவடைந்துள்ளது. அரிசி இறக்குமதி செய்வதற்கான அவசியம் கிடையாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாம் விவசாய உற்பத்தி பாதிப்புகளுக்கான நஷ்டஈடுகளை வழங்குவதற்கு பில்லியன் கணக்கான ரூபாய்களை இதுவரை செலவிட்டுள்ளோம். இலட்சக்கணக்கான ஏக்கர் காணிகள் வறட்சியினால் பாதிப்படைந்தன. அதேபோன்று மேலும் இலட்சக்கணக்கான ஏக்கர் காணிகள் மழை, வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டன. அதற்கு மில்லியன் கணக்கில் நிவாரணங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.

 

நிவாரணங்கள் வழங்குவதில் சற்று காலதாமதம் ஏற்படலாம். எனினும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணங்கள் வழங்கப்படும். இத்தகைய பாதிப்புகளுக்கு மத்தியிலும் நாடு அரிசியில் தன்னிறைவு கண்டுள்ளது.

அவ்வாறானால் ஏன் வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுகின்றது? என எவரும் கேட்க முடியும்.

வெளிநாடுகளிலிருந்து மூன்று இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டது. பின்னர் அது 2 இலட்சம் மெட்ரிக் தொன் என தெரிவிக்கப்பட்டு இறுதியில் அது 50,000 மெற்றிக் தொன்னாக குறைக்கப்பட்டது.

 

என்னைப் பொறுத்தவரை அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. நாட்டில் எவரும் பட்டினி கிடக்கவில்லை. கீரி சம்பா அரிசியில் மாத்திரமே குறைபாடு காணப்பட்டது. அதனை நிவர்த்தி செய்வதற்கே பொன்னி சம்பா அரிசி கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாம் விருப்பம் இல்லை என்றாலும் அதற்கு இணக்கம் தெரிவிக்க நேர்ந்தது.

நெல் ஆலை உரிமையாளர்கள் கீரி சம்பாவை பதுக்கிய காரணத்தாலேயே அவ்வாறு கீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய நேர்ந்தது. அதுவும் சுமார் 15,000 மெற்றிக் தொன் கீரி சம்பா அரிசியே கொள்வனவு செய்யப்பட்டது. எனினும் நாடு தற்போது அரிசியில் தன்னிறைவு கண்டுள்ளது. அதனால் அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் கிடையாது என்பதே எனது நிலைப்பாடு என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.