உக்ரைனை அதிர வைக்கும் ரஷ்ய ஏவுகணைகள்

07.12.2022 00:34:56

எட்டு வாரங்களில் எட்டாவது முறையாக உக்ரைன் முழுவதும் உள்ள இலக்குகளை நோக்கி ரஷ்யா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

முக்கியமாக உக்ரைனின் கிழக்குப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு குறிப்பிடத்தக்க இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுவரும் புதிய தாக்குதல்களால் கீவ் உள்ளிட்ட பகுதிகளிலும் தெற்குப்பகுதியில் ஒடேசாவிலும் மின்சாரம் முழுமையாக தடைபட்டுள்ளது.

இந்த தாக்குதல்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது

ஏவுகணை தாக்குதல்கள்

 

ஆனால், கடந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு வந்த இந்த ஏவுகணை தாக்குதல்கள், முந்தைய சந்தர்ப்பங்களில் இருந்ததை விட குறைவான சேதத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

ரஷ்யா வீசிய 70 ஏவுகணைகளில் 60 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவிக்கின்ற போதிலும் திட்டமிடப்பட்ட 17 இலக்குகளையும் தாக்கியதாக ரஷ்யா கூறியுள்ளது.

ரஷ்யாவின் இந்தத் தாக்குதல்கள், அண்டை நாடான மால்டோவாவில் மின்சார விநியோகத்தை பாதித்துள்ளதாக, உக்ரைனிய அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

வெடிப்புச் சம்பவங்கள்

ரஷ்யாவிற்குள் இரண்டு விமானத் தளங்களில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான வெடிப்புச் சம்பவங்களுக்கு சில மணிநேரங்களுக்குப் பின்னர் உக்ரைன் மீதான இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ரியாசான் மற்றும் சரடோவ் பிராந்தியங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மூன்று ரஷ்ய படைவீரர்கள் கொல்லப்பட்டதுடன், நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு விமானங்கள் சிறிதளவு சேதமடைந்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.