
ஈரானில் வெடித்து சிதறிய கண்டெய்னர்!
ஈரானில் உள்ள முக்கியமான சர்வதேச வணிக துறைமுகமான பந்தர் அபாஸில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
ஈரானின் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அபாஸ், உலக நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதியின் முக்கிய கேந்திரமாகவும், ஈரான் பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன் தினம் துறைமுகத்தில் பணியாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது கண்டெய்னர் ஒன்று பயங்கரமாக வெடித்து சிதறியது. இதனால் நாலாப்பக்கமும் தீ பரவி துறைமுகத்தின் பல பகுதிகள் பற்றி எரிந்தது. இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பலியான நிலையில், 400 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 40ஐ கடந்துள்ளது. கண்டெய்னர் வெடித்து சிதறியதற்கான காரணம் குறித்த விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில், ஏவுகணையை செலுத்த பயன்படும் எரிசக்தி ரசாயனம் இருந்த கண்டெய்னர் வெடித்ததாக தெரிய வந்துள்ளது.