நீதிமன்றில் வழக்கு பொருட்களை திருடிய ஐவர் சிக்கினர்

04.12.2023 02:00:00

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தின் வழக்குப் பொருட்கள் அறையில் ஹெரோயின் மற்றும் துப்பாக்கிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மாத்தறை நீதவான் நீதிமன்றில் கடமையாற்றும் மூன்று பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வழக்கு அறையில் இருந்த பொருட்கள் காணாமல் போனது தொடர்பாக நீதிமன்ற பதிவாளர் கடந்த ஜூலை மாதம் 12ம் திகதி மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதன்படி, விசாரணைகளின் போது, ​​மாத்தறை நீதவான் நீதிமன்றில் கடமையாற்றும் பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இருவரை கடந்த நவம்பர் மாதம் 26 மற்றும் 28 ஆம் திகதிகளில் பொலிஸார் கைது செய்தனர்.

மாத்தறை நாவிமன மற்றும் கேகனதுர பிரதேசத்தை சேர்ந்த 21 மற்றும் 29 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இந்த சம்பவத்துடன் நீதவான் நீதிமன்றில் கடமையாற்றும் மற்றுமொருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய துடாவ பிரதேசத்தைச் சேர்ந்த நீதிமன்றத்தில் பணிபுரியும் 27 வயதுடைய பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற வழக்கு அறையில் இருந்து டி56 ரக துப்பாக்கி மற்றும் ரிவால்வர் ரக துப்பாக்கியை இந்த சந்தேக நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

ரிவோல்வர் ரக துப்பாக்கி 280,000 ரூபாவுக்கு வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதனுடன் தொடர்புடைய மற்றைய நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் துடாவ பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் ஆவார்.

மேலும், ரிவோல்வர் ரக துப்பாக்கியை வாங்கிய 32 வயதுடைய சந்தேக நபரும் பொலிஸ் விசாரணையின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, சந்தேகநபர்களால் திருடப்பட்ட T56 ரக துப்பாக்கியானது, கடந்த ஓகஸ்ட் 8ஆம் திகதி டிக்வெல்ல பொலிஸ் பிரிவில் மனிதனைக் கொலைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த துப்பாக்கியும் சந்தேகநபர்களால் 250,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், இதனை வாங்கிய நபரை கண்டறிய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மூவரும் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு தடுப்பு காவல் உத்தரவு பெற்று மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மற்றைய இரு சந்தேகநபர்களும் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.