’விவசாயத்திற்கு அதிக பங்களிப்பை வழங்க திட்டம்’

30.04.2024 08:04:01

நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு விவசாயத்திற்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நேற்று முன்தினம் இடம்பெற்ற டில்மா சினமன் வர்த்தக நாமத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

'சிலோன் டீ' என்ற பெயரை சர்வதேச சந்தைக்கு கொண்டு சென்ற டில்மா வர்த்தக நாமம்,  தனது நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் உள்நாட்டு ஏற்றுமதியை மேலும் விரிவுபடுத்தி இலங்கையின் கறுவா தொழிற்துறையில் பிரவேசித்து டில்மா வர்த்தக நாமத்தின் கீழ் உயர்தர கறுவா உற்பத்திகளை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் உலக சமையல் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் மாஸ்டர் செஃப் தோமஸ் குக்லர் ஆகியோர் டில்மா கறுவா தயாரிப்புகளை அடையாள ரீதியில் வெளியிட்டனர். இதன்போது ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,

கறுவாப் பயிர் விவசாயம் அக்காலத்தில் நம் நாட்டின் முக்கிய பயிராக இருந்தது. பொலன்னறுவை இராச்சியம் வீழ்ச்சியடைந்த பின்னர், தென்மேற்கு ஈரவலயப் பிரதேசத்திற்கு எமது இராச்சியங்கள் இடம்பெயர்ந்த போது, கறுவாத் தொழில்தான் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டுசென்றது.

எங்களிடம் கறுவா இல்லை என்றால் தம்பதெனிய, யாப்பஹுவ, கம்பளை, ரைகம, கோட்டே ஆகிய இராச்சியங்கள் தோன்றியிருக்காது. இப்படித்தான் கறுவா நம் நாட்டின் வரலாற்றோடு இணைக்கப்பட்டுள்ளது என்றார்