சிரிய ஜனாதிபதி விமானத்தில் தப்பியோட்டம்!

08.12.2024 14:06:45

சிரிய கிளர்ச்சியாளர்கள் அதிரடியான தாக்குதலை அடுத்து சிரிய அரசு வீழ்ந்து இருப்பதாக சமீபத்திய தகவல்கள் வெளிவருகின்றன. சிரிய கிளர்ச்சியாளர்கள் படை சிரிய அரசு ராணுவம் மற்றும் ரஷ்யாவின் வான்வழி தாக்குதல் படை ஆகியவற்றுக்கு எதிராக சண்டையை கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னெடுத்தனர். தெற்கே தாரா மாகாணம், கோலன் குன்றுகளுக்கு அருகிலுள்ள குனிட்ரா முகாம்கள் உட்பட முக்கிய நகரங்களை சிரிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து கிளர்ச்சியாளர்கள் படை கைப்பற்றியது.

   

மேலும், தலைநகர் டமாஸ்கஸை சுற்றி வளைக்கும் இறுதிக் கட்டப் பணியை நமது படைகள் தொடங்கிவிட்டதாக சிரிய கிளர்ச்சியாளர்கள் படையின் தளபதி ஹசன் அப்தெல் கானி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்கள் படையின் முன்னேற்றத்தை சிரிய ராணுவம் தடுக்க முடியாததை அடுத்து ஜனாதிபதி பஷர் அல் அசாத் தலைநகர் டமாஸ்கஸில் இருந்து விவரம் வெளியிடப்படாத இடத்திற்கு விமானம் மூலம் தப்பிச் சென்று இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மற்றும் மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகத்திடம் பேசும் போது சிரிய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிரிய ராணுவ கட்டளை அதிகாரிகளுக்கு சிரியாவில் 24 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்து இருப்பது தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் சிரிய அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் அமைதியான முறையில் எதிர்கட்சிகளிடம் ஆட்சியை வழங்க தயாராக இருப்பதாகவும் சிரியா பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்களுக்கு சற்று முன்னதாக கிளர்ச்சியாளர்கள் படை ஒரு முழுநாள் தீவிர சண்டைக்கு பிறகு சிரியாவின் முக்கிய நகரான ஹோம்ஸின் கட்டுப்பாட்டையும் கைப்பற்றியுள்ளனர்.