கோட் படப் பாடல்

25.07.2024 08:00:00

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் யுவன் ஷங்கர் ராஜா, தற்போது விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ பணியாற்றி வருகிறார். இப்படத்தின் இரண்டாவது பாடல் ‘சின்ன சின்ன கண்கள்...’, விஜய்யின் பிறந்தநாளான கடந்த ஜூன் 22ஆம் தேதி வெளியாகியிருந்தது. இப்பாடலை விஜய் பாடியிருக்க ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு இப்பாடலில் மறைந்த பாடகி பவதாரணியின் குரலும் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தப்பட்டிருந்தது. 

 

இதற்கிடையில் இசை நிகழ்ச்சிகளை அவ்வபோது அரங்கேற்றி வரும் யுவன் ஷங்கர் ராஜா, லாங் ட்ரைவ் என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இந்நிகழ்ச்சி பெங்களூர், இலங்கையில் நடந்து முடிந்த நிலையில் அடுத்ததாக சென்னையில் நடக்கவுள்ளது. ஜூலை 27ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.  மைதானத்தில் நடைபெறவுள்ளதை அடுத்து, இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினார் யுவன் ஷங்கர் ராஜா. 

அப்போது யுவனிடம், ‘சின்ன சின்ன கண்கள்...’ பாடல் உருவான விதம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், “நானும் வெங்கட் பிரபுவும் பெங்களூரில் அந்தப் பாடலுக்காக  இசையமைத்துக் கொண்டிருந்தோம். அப்போது, அந்தப் பாடலை பவதாரணி பாட வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரம் அது. பின்பு அவர் குணமாகி வந்ததும் இப்பாடலை உருவாக்கலாம் என நினைத்தோம். அதற்குள் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது.

 

அதன் பிறகு இந்தப் பாடலை எப்படி உருவாக்கலாம் என யோசிக்கும்போது, மறைந்த பாடகர்களான ஷாகுல் ஹமீது, பம்பா பாக்யா ஆகியோரின் குரல்களை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் லால் சலாம் படத்தில் பயன்படுத்தி இருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். அது எப்படிச் செய்தார் என்று அந்தத் தொழில்நுட்ப குழுவிடம் கேட்டு, பவதாரணியின் குரலுக்கு ஒத்துப்போகும் பிரியங்காவின் குரலை ரெக்கார்ட் செய்து அனுப்பினோம். அப்படித்தான் அந்தப் பாடல் உருவானது” என்றார்.