மீண்டும் அதிமுகவுக்கு செல்கிறாரா செந்தில் பாலாஜி?

19.06.2026 08:14:35

பிரபல யூடியூபரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கரின் சமீபத்திய எக்ஸ் பதிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவல், திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளிடையேயும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சவுக்கு சங்கர் தனது பதிவில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செந்தில் பாலாஜிக்கு மிக முக்கிய அழைப்பு ஒன்றை விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். "எனக்கு பின்னால் நீங்கள்தான் பொதுச்செயலாளர். என் வாழ்நாள் வரை நான் பொதுச்செயலாளராக இருந்து கொள்கிறேன். உங்களால் இந்த கட்சியை வழிநடத்த முடியும்" என்று ஈபிஎஸ் தூது அனுப்பியதாக அவர் கூறியுள்ளார்.

 

மறுபுறம், பாஜகவும் செந்தில் பாலாஜியை தங்கள் பக்கம் இழுக்க தீவிர முயற்சி செய்வதாக சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ளார். திமுகவிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு வந்தால், தமிழக பாஜகவின் தலைமை பொறுப்பை வழங்க தயாராக இருப்பதாகவும், அப்படி வந்தால் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குகளிலிருந்து விடுபட்டு "பரிசுத்த ஆவி" ஆகலாம் என பாஜக தரப்பு அழைப்பதாகவும் அந்த ட்வீட்டில் கூறப்பட்டுள்ளது. 

 

திமுகவில் அவருக்கு தலைமை பொறுப்பு கிடைக்க வாய்ப்பே இல்லை என்பதை சுட்டிக்காட்டி இந்த அதிரடித் திருப்பங்கள் நடக்கலாம் என சவுக்கு சங்கர் கணித்துள்ளார். இந்தத்தகவல் தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.