ராணியின் மறைவை அடுத்து இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள அதிரடி மாற்றங்கள்

11.09.2022 10:47:15

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை தொடர்ந்து புதிய மன்னராக சார்லஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு தேசிய கீதம், நாணயம், கடவுச்சீட்டு மற்றும் தபால் தலை உள்ளிட்டவை மாற்றியமைக்கப்பட உள்ளன.

தேசிய கீதத்தில் மாற்றம்

கடந்த 1952ஆம் ஆண்டில் இங்கிலாந்து ராணியாக இரண்டாம் எலிசபெத் பதவியேற்ற நாளில் இருந்து பிரிட்டனின் தேசிய கீதத்தில் ‘‘கோட் சேவ் த குயின்’’ என்ற வரிகள் பாடப்பட்ட நிலையில், தற்போது சார்லஸ் மன்னராக இருப்பதால் ‘‘கோட் சேவ் த கிங்’’ என்று தேசிய கீதம் மாற்றப்படுகிறது.

கடவுள்தான் ராணியை காக்கிறார் என்ற தேசிய கீதம் கடந்த 70 ஆண்டுகளாக பாடப்பட்டு வருகிறது. அதற்கு முன்பு கடவுள் அரசரை காக்கிறார் என்று பாடப்பட்டு வந்தது. சார்லஸ் தற்போது அரசராகப் பதவியேற்றிருக்கும் நிலையில் அரசி என்று வரும் இடங்களில் எல்லாம் அரசர் என்று மாற்றம் செய்யப்பட இருக்கிறது.

அதாவது. கடவுளே எங்களுடைய அரசரைக் காப்பாற்று! எங்கள் உன்னதமான அரசர் நீண்ட காலம் வாழ வேண்டும். கடவுளே அரசரை காப்பாற்று. அவருக்கு வெற்றி, மகிழ்ச்சி மற்றும் புகழைக் கொடு. எங்களை நீண்டகாலம் ஆட்சி செய்ய வேண்டும். கடவுளே எங்கள் அரசரைக் காப்பற்று” என்று மாற்றப்பட இருக்கிறது. 

கொடியில் மாற்றம்

தேசிய கீதத்தைத் தொடர்ந்து அரச கொடியும் மாற்றப்பட இருக்கிறது. நீல நிறப் பின்னணியில் ரோஜா பூக்கள் சுற்றியிருக்க, இ என்ற எழுத்தின் மேல் கிரீடம் அமைக்கப்பட்ட கொடியை எலிசபெத் ராணி பயன்படுத்தி வந்தார். தற்போது அந்த கொடியில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது. தற்போது வேல்ஸில் தான் பயன்படுத்திக் கொண்டிருக்கும் கொடியை பயன்படுத்த இருக்கிறார் சார்லஸ்.

தபால் தலைகள் மாற்றம்

அரசர் நான்காம் ஜோர்ஜ் ஆட்சியில் 1820ல் வடிவமைக்கப்பட்ட வைர கிரீடத்தை மகாராணிகள் அணிந்து வருகின்றனர். அந்த கிரீடம் அணிந்திருப்பது போன்று தபால் தலைகள் வெளியிடப்பட்டு வந்தன. இரண்டம் எலிசபெத் வைர கிரீடத்தை அணிந்த தபால் தலைகள் தான் இதுவரை பயன்படுத்தப்பட்டுவந்தது. அதில் சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு வெளியாகிக் கொண்டிருந்தது. தற்போது சார்லஸ் அரசராகப் பதவியேற்றிருப்பதால், சார்லஸின் முகம் அடங்கிய தபால் தலைகள் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

பணம்,நாணயங்களில் மாற்றம்

இங்கிலாந்து அரசு அதன் 1100 ஆண்டுகால தொடர் ஆட்சியை குறிக்கும் வகையில் பணம் மற்றும் நாணயங்களை வெளியிட்டு வருகிறது. அதைப் போலவே மகாராணி எலிசபெத்தின் படம் அடங்கிய பணம் மற்றும் நாணயங்கள் வெளியிடப்பட்டு வந்தது. ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை அவரது உருவம் அடங்கிய புதிய நாணயங்கள் மற்றும் பணங்கள் வெளியாகும். தற்போது எலிசபெத் மறைந்த நிலையில், அரசர் சார்லஸின் புகைப்படம் நாணயம் மற்றும் பணங்களில் வெளியாக இருக்கிறது.