முன்னாள் ஜனாதிபதிக்கு பதிலடி கொடுத்தார் பிரதமர்

31.10.2024 09:38:23

பொது மக்களால் பல தடவைகள் நிராகரிக்கப்பட்டு தொடர்ச்சியாக பல தேர்தல்களில் தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து அரசியலமைப்பை கற்க வேண்டுமா என பிரதமர் ஹரிணி அமரசூரிய கேள்வி எழுப்பியுள்ளார். 

பொது நிகழ்வொன்றில் உரையாற்றிய பிரதமர் அமரசூரிய, 17 முறை தேர்தலில் தோல்வியடைந்த போதிலும், ரணில் விக்கிரமசிங்க விலகுவதாகத் தெரியவில்லை, மேலும் தனது அரசியல் வாழ்க்கையில் தொங்கிக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

“பொதுமக்கள் மாறிவிட்டார்கள், அவரை நிராகரித்துவிட்டார்கள் என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை போலும். இருப்பினும், நாங்கள் ஒரு புதிய பயணத்தை தொடங்கியுள்ளோம், ”என்று அவர் கூறினார். 

அரசியலமைப்பின் அடிப்படையானது மக்களின் ஆணையாகும் என சுட்டிக்காட்டிய பிரதமர், இந்த அடிப்படை விடயத்தை புரிந்து கொள்ளாத ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு அரசியலமைப்பை கற்பிக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

“அரசியலமைப்பின் அடிப்படைகளை அறிந்த ஒருவர் தேர்தலை ஒத்திவைக்க மாட்டார், அல்லது தேசிய பேரவை அல்லது நீதித்துறையின் முடிவுகளில் தலையிட மாட்டார். அரசியலமைப்பைப் பற்றி எனக்குக் கற்பிக்க குறைந்தபட்சம் இந்த அடிப்படைகளை அவர் அறிந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், ”என்று அவர் கூறினார். 

தமக்கு தான் எல்லாம் தெரியும், மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது எனக் கருதி செயற்பட்ட தலைவர்களின் செயற்பாடுகளினால் இலங்கை நாசமடைந்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தற்போது நாட்டில் இவ்வாறானதொரு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானம் எடுப்பதற்கு அதிகாரிகளின் அனுமதி தேவையில்லை என ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தெரிவித்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த பிரதமர் அமரசூரிய, அது ரணிலின் ஆட்சி முறை எனவும், ஆனால் புதிய அரசாங்கம் அவ்வாறின்றி அது வேறு அணுகுமுறையை பின்பற்றுவதாகவும் தெரிவித்தார்.

“முடிவெடுப்பதற்கு முன், மக்களின் தேவைகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஆலோசனைகளை நாங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்கிறோம். எங்கள் முடிவுகள் பொதுமக்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகின்றன,” என்று அவர் வெளிப்படுத்தினார். 

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் தொடர்பில் முன்னாள் அரசாங்கம் பின்பற்றிய நடைமுறைகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோர் அண்மையில் முரண்பட்டுள்ளனர்.

முன்னாள் அரசாங்கம் முறையான நடைமுறைகளை பின்பற்றவில்லை என பிரதமர் அமரசூரிய கூறியதற்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க, அமைச்சரவை தீர்மானங்களுக்கு திணைக்கள அதிகாரிகளின் அங்கீகாரம் தேவையில்லை எனவும், அரசியலமைப்பு குறித்து பிரதமருக்கு பயிற்சி தேவையா எனவும் கேள்வி எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.