பிடிகொடுக்காத பிரேமலாத குழப்பத்தில் எடப்பாடி!

16.01.2026 14:14:36

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணி அமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தேமுதிக உடனான பேச்சுவார்த்தை தற்போது இழுபறி நிலைக்கு சென்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பாமகவை விட ஒரு தொகுதியாவது அதிகமாக வேண்டுமென என்ற தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் பிடிவாதமே இந்த தாமதத்திற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில மாதங்களாகவே, 2026 தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்பதே அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வந்தது. அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், "ஜனவரி 9-ம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்போம்" என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தொடர்ந்து கூறி வந்தார். இதனால் அந்த மாநாடு, ஒரு சாதாரண கட்சி நிகழ்வாக அல்லாமல், அரசியல் திருப்புமுனை ஏற்படும் மேடையாகவே பார்க்கப்பட்டது.

ஆனால், கடலூரில் நடைபெற்ற தேமுதிக 'உரிமை மீட்பு மாநாடு 2.0' முடிந்த பின்னரும் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. பிரேமலதா பிடிவாதம் மாறாக, "யாருடன் கூட்டணி அமைப்பது என்பதை முடிவு செய்துவிட்டோம். ஆனால் இப்போது அதை அறிவிக்க மாட்டோம். இதுவரை சத்ரியர்களாக இருந்த நாம், இனிமேல் சாணக்கியர்களாகவும் இருப்போம்" என்று கூறி, பிரேமலதா சஸ்பென்ஸை அதிகரித்தார். இந்த அணுகுமுறை, கூட்டத்தை காட்டி பேரம் பேசும் அரசியலாகவே பலரால் விமர்சிக்கப்படுகிறது.

அந்த மாநாட்டில் எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் மக்கள் திரண்டது தேமுதிக தலைமையை உற்சாகப்படுத்தியதாக கூறப்படுகிறது. கட்சி நிர்வாகிகளே எதிர்பார்க்காத வகையில், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் மாநாட்டில் கலந்து கொண்டதாக தகவல் வெளியானது. இதனை அடிப்படையாக வைத்து, அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் தேமுதிக கூடுதல் அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. பிரேமலதா வைக்கும் கோரிக்கைகள் எங்களை சிக்கலில் ஆழ்த்துகின்றன.

பாமக-வுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை இன்னும் இறுதியாக அறிவிக்காத நிலையிலேயே, அவர்களுக்கு கொடுப்பதை விட ஒரு தொகுதியாவது கூடுதலாக தேமுதிகவுக்கு வேண்டும்' என்று அவர் வலியுறுத்துகிறார். மாநிலம் முழுவதும் கட்சி அமைப்பு இருப்பதை காரணமாக்கி இந்த கோரிக்கையை முன்வைக்கிறார் என்கின்றனர் அதிமுகவினர். மேலும், சில குறிப்பிட்ட தொகுதிகளை தேமுதிகவுக்கே ஒதுக்கப்பட வேண்டும் என்றும், அதோடு சேர்த்து சில 'ஆஃபர்கள்' குறித்தும் பிரேமலதா தரப்பு வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. அந்த கோரிக்கைகளில் சிலவற்றை ஏற்க அதிமுக தரப்பு தயாராக இருந்தாலும், தொகுதி எண்ணிக்கையில் மட்டும் பிரேமலதா பிடிவாதமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாமகவை விட தேமுதிகவுக்கு ஒரு தொகுதி கூடுதலாக கொடுத்தால், வடமாவட்டங்களில் பாமகவை கூட்டணியில் சேர்த்த நோக்கமே கேள்விக்குறியாகி விடும். அது தேர்தல் கணக்கில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதனால்தான் இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடும் அதிருப்தி உள்ளது என்றும் அதிமுகவினர் சொல்கின்றனர். இதனால், அதிமுக-தேமுதிக கூட்டணி உறுதி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், தொகுதி பங்கீடு தொடர்பான இந்த பிடிவாதம் தீரும் வரை கூட்டணி அறிவிப்பு தள்ளிப் போகும் சூழல் உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.