பொருளாதாரக் கட்டமைப்பைச் சிதைக்க பலர் சூழ்ச்சி
நாட்டை முன்னேற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை சிதைப்பதற்கு நாட்டிலுள்ள பலர் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சட்டத்தரணிகளுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.
இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது“ கடந்த இரண்டு வருடங்களில் இந்த நாட்டின் அரசியல் கலாச்சாரம் மாறிவிட்டது. நாட்டைப் பற்றி சிந்தித்து ஒரு குழு உருவானது.
அவர்கள் சம்பிரதாய அரசியலில் இருந்து விலகி செயல்பட்டனர். 2022 மே 09 ஆம் திகதி நடந்த சம்பவத்தைப் பற்றி நான் மீண்டும் குறிப்பிடத் தேவையில்லை.
நாட்டு மக்கள் ஒடுக்கப்பட்டதால், போராட்டங்கள் வெடித்தன. இந்த பிரச்சாரங்களை சிலர் பயன்படுத்திக் கொள்ள முயன்றனர். இறுதியில் சம்பிரதாய கட்சிகளால் நாட்டின் தலைமைத்துவத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டது.
மஹிந்த ராஜபக்ஷ மே மாதம் 9ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து விலகினார். அப்போது ஆட்சி அதிகாரத்தை தக்கவைக்கும் நிலையில் மொட்டுக் கட்சி இருக்கவில்லை. அந்த உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அமைச்சர்கள் இராஜினாமா செய்தனர். இறுதியாக நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அனைத்துக் கட்சித் தலைவர்களும் நாடாளுமன்றத்திற்குள் இருந்தனர்.
இது தொடர்பாக அவர்களுக்கு இராணுவத் தளபதி அறிவித்த போது, பிரதமர் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். அதுவும் பின்னர் இடம்பெற்றது. இதன் பின்னர் பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து நாட்டுக்காகப் பணியாற்றினர்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்