தப்பிக்க முடியாதவாறு தீர்மானம் வேண்டும்

16.09.2022 00:06:00

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் 17 பக்க எழுத்துமூல அறிக்கை ஏற்கனவே ஐ.நாவில் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த 12ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியது. இவ்வாறு ஆரம்பித்த முதல் நாளிலிருந்து சிறிலங்கா தொடர்பில் பல நாடுகளின் பிரதிநிதிகளும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதக் குலத்துக்கு எதிரான குற்றங்களிலிருந்து சிறிலங்கா அரசாங்கமும், படையினரும் தப்பிக்க முடியாதவாறு மிகவும் இறுக்கமான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தல் விடுத்துள்ளார்.

உறுப்பு நாடுகள் முழுமையான ஆதரவு வழங்க வேண்டும்

அதுமட்டுமன்றி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பதில் ஆணையாளர் நாடா அல் -நஷீப்பின் உரை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்தக் கூட்டத் தொடரின் ஆரம்ப நாளில் சிறிலங்கா தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவின் பதில் ஆணையாளர் ஆற்றிய உரையை வரவேற்கின்றோம்.

அறிக்கைக்கு வரவேற்பு

அதேவேளை . சிறிலங்கா தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரால் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த அறிக்கையையும் நாம் வரவேற்கின்றோம்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பில் ஏற்கனவே நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றவில்லை.

மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஐ.நா தீர்மானத்தின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் உதாசீனம் செய்து வருகின்றது.

அரசியல் தீர்வு சம்பந்தமான பரிந்துரையையும் கூட சிறிலங்கா நடைமுறைப்படுத்தவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்னமும் நடைமுறையில்தான் இருக்கின்றது.

வாக்குறுதிகளை நிறைவேற்றாத சிறிலங்கா அரசாங்கம்

அதன் கீழ் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன. ஐ.நாவுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் சிறிலங்கா அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதிலும் அவற்றில் எதுவும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

அந்த வாக்குறுதிகளைக் கிடப்பில் போட்டுவிட்டு சர்வதேச சமூகத்தை இதுவரை காலமும் சிறிலங்கா அரசாங்கம் ஏமாற்றி வந்தது. மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களிலிருந்து சிறிலங்கா அரசாங்கமும், படையினரும் தப்பிக்க முடியாதவாறு மிகவும் இறுக்கமான தீர்மானம் இந்தமுறை ஜெனிவாவில் நிறைவேற்ற வேண்டும்.

இதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் முழுமையான ஆதரவை வழங்கவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வழங்கியே தீரவேண்டும்” என்று இரா.சம்பந்தன் தெரிவித்தார்.