பிரதமர் மோடி இரங்கல் - இங்கிலாந்து ராணியின் கணவர் பிலிப் மரணம்

10.04.2021 10:11:00

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் மரணம் அடைந்தார்.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் (99). இளவரசி எலிசபெத், ராணி ஆவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னதாக 1947-ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி பிலிப் அவரை திருமணம் செய்து கொண்டார்.

இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில், இளவரசராக நெடுங்காலம் சேவை ஆற்றியவர் இளவரசர் பிலிப். இவர் நேற்று மரணம் அடைந்தார்.

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டது.

இளவரசர் பிலிப் வரும் ஜூன் மாதம் 10-ம் தேதி 100-வது பிறந்தநாள் கொண்டாடவிருந்த நிலையில் மரணம் அடைந்திருப்பது வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

இதயக் கோளாறால் அவதிப்பட்டு 28 நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து மருத்துவ சிகிச்சை பெற்று, கடந்த மாதம் 16-ம் தேதி விண்ட்சார் கோட்டைக்கு இளவரசர் பிலிப் திரும்பி இருந்தார்.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இளவரசர் பிலிப் மறைவுச் செய்தி மிகுந்த வேதனையை அளித்துள்ளது. அவர் இங்கிலாந்திலும், காமன்வெல்த் நாடுகளிலும் உலகமெங்கும் பல தலைமுறையினரின் அன்பை பெற்றிருந்தார். அவர் எண்ணற்ற இளைஞர்களின் ஆதர்ச சக்தியாக விளங்கினார் என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், இளவரசர் பிலிப் மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், எடின்பர்க் கோமகன் இளவரசர் பிலிப் மறைவால் துயருறும் இங்கிலாந்து மக்கள் மற்றும் அரச குடும்பத்துடன் என் எண்ணங்கள் இணைந்துள்ளன. அவர் ராணுவத்தில் மிகச்சிறப்பாக பணியாற்றி உள்ளார். பல சமூக சேவைகளையும் முன்னின்று ஆற்றி உள்ளார். அவரது ஆன்மா அமைதி அடைவதாக என தெரிவித்துள்ளார்.