மின்சாரம், எரிபொருள் விலைகளில் வரப்போகும் மாற்றம் .

30.05.2026 13:02:54

செலவை ஈடுசெய்யக்கூடிய வகையில் மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளை நிர்ணயிக்கும் முறையை மீண்டும் நிலைநிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

 

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைகான விரிவான கடன் வசதித் திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளைப் பூர்த்தி செய்து, அதற்கான அனுமதியை வழங்குவதற்கு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை கடந்த 27 ஆம் திகதி நடவடிக்கை எடுத்திருந்தது. 

 

அதற்கமைய, இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதற்காக 695 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்குக் கிடைத்துள்ளன.

இதற்கு முன்னதாக, கடந்த 13 ஆம் திகதி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோரின் கையொப்பங்களுடன் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருக்குக் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அக்கடிதத்தில், சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் முக்கிய முன்நிபந்தனையான செலவை ஈடுசெய்யும் மின்சாரம் மற்றும் எரிபொருள் விலை நிர்ணய முறையை மீண்டும் நிலைநிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், எரிபொருள் மானியங்கள் உள்ளிட்ட பிற நிவாரண நடவடிக்கைகள் அனைத்தும் 100 பில்லியன் ரூபா எல்லைக்கு உட்பட்டது என்றும், அது வரும் செப்டெம்பர் மாத இறுதிக்குள் முழுமையாகச் செலுத்தப்பட்டு முடிக்கப்படும் என்றும் அக்கடிதத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் திட்டத்தின் கீழ் நாட்டின் பொருளாதாரச் சீர்திருத்தச் செயன்முறையைத் தொடர்ந்து முன்னெடுக்க அரசாங்கம் முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.