மணிலா சென்றார் பிரதமர் ஹரிணி!

09.03.2026 14:45:33

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) விசேட அழைப்பின் பேரில், சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றடைந்தார்.

 

மணிலாவிலுள்ள நினோய் அக்வினோ சர்வதேச விமான நிலையத்தை (NAIA) சென்றடைந்த பிரதமரை, பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி சானக்க தல்பஹேவா தலைமையிலான குழுவினர் வரவேற்றனர். இந்த வரவேற்பு நிகழ்வில் பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இந்த விஜயத்தின் மிக முக்கியமான அங்கமாக, மணிலாவிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைமையகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் தின விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விசேட உரையாற்றவுள்ளார். பெண்களின் வலுவூட்டல் மற்றும் பிராந்திய அபிவிருத்தி குறித்து அவர் தனது உரையில் முக்கியத்துவப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது விஜயத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

இதன்போது இலங்கை - பிலிப்பைன்ஸ் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு. இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல். வர்த்தகம் மற்றும் கல்வி சார் நலன்கள் குறித்துக் கலந்துரையாடப்படவுள்ளது.