’தேர்தல் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்’

22.11.2024 08:22:49

விகிதாசார தேர்தல் முறைமையை அவ்வாறே தொடர்ந்து கொண்டு செல்வதன் மூலம் இந்த நாட்டின் அனைத்து சிறிய கட்சிகளுக்கும் அதேபோன்று சிறுபான்மை மக்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கிறது என்பதை நாங்கள் மீண்டுமொரு முறை நினைவுபடுத்த விரும்புகிறோம். அவ்வாறே தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு தேவையான தேர்தல் திருத்தங்களை நாங்கள் மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட எம்.பி.யும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை 10 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக நியமிக்கப்பட்ட கலாநிதி அசோக சபுமல் ரன்வலவுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர்  மேலும் பேசுகையில்,

மாற்றமிக்க அரசியல் யுகத்தில் அந்த மாற்றத்தை நிலைப்படுத்தி, இதற்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக இல்லாமல் புதிய சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். இந்த மாற்றத்தை மேற்கொள்ள வாக்களித்த மக்களின் தீர்ப்புக்கு நாங்கள் தலை வணங்குகின்றோம்.அத்துடன் இந்த இடத்தில் ஒரு விடயத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். அதாவது சபாநாயகராகிய நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்கள் விடுதலை முன்னணி முதற்தடவையாக 1994ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு வருவதற்கு காரணமான விடயம் ஒன்றுள்ளது

எமது கட்சியின் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப், அப்போது ஜனாதிபதி வேட்பாளராக இருந்த மறைந்த ரணசிங்க பிரேமதாசவிடம் கோரி்க்கை ஒன்றை வைத்திருந்தார். அதாவது விகிதாசார தேர்தல் முறையின் கீழ் பாராளுமன்றத்துக்கு வருவதற்கு தடையாக இருந்த, நூற்றுக்கு 12வீத வாக்குகளை எடுக்க வேண்டும் என்ற விடயத்தை நூற்றுக்கு 5வீதமாக குறைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். அதனடிப்படையில்,  அப்போதைய அரசியல் நிலைமையில் அம்பாந்தோட்டையில் இருந்து மலர்ச்செண்டு சின்னத்தில் தேசப்பற்று கட்சியில் போட்டியிட்ட ஒரு உறுப்பினர் தெரிவானார். அன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த மாற்றம் இன்று பாரிய மாற்றத்துக்கு உங்கள் கட்சி வந்துள்ளது.

 அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்தது எமது கட்சியின் மறைந்த தலைவராகும்.. அதேபோன்று எம்மைப்போன்று சிறிய கட்சிகளுக்கும் அது பாரிய நன்மையாக மாறியது. இந்த பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்த எமக்கு வாய்ப்பு கிடைத்தது. 1994இல் மக்கள் விடுதலை முன்னணியின் நிஹால் கலபத்தியே முதலாவதாக  பாராளுமன்றத்துக்கு வந்தார். அதே பாராளுமன்றத்துக்கு நானும் முதல்தடவையாக பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

எனவே விகிதாசார தேர்தல் முறைமையை அவ்வாறே தொடர்ந்து கொண்டு செல்வதன் மூலம் இந்த நாட்டின் அனைத்து சிறிய கட்சிகளுக்கும் அதேபோன்று சிறுபான்மை மக்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கிறது என்பதை நாங்கள் மீண்டுமொரு முறை நினைவுபடுத்த விரும்புகிறோம். அவ்வாறே தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு தேவையான தேர்தல் திருத்தங்களை நாங்கள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.