வேட்பாளர்களுக்கு எதிரான வழக்குகள்.
|
தேர்தல் பிரசார செலவின அறிக்கைகளை சட்டபூர்வ காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக ஒவ்வொரு மாவட்டத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற வழக்குகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளதாக அதன் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
|
|
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பிரசார செலவீனங்கள் தொடர்பில் நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் குறித்த விடயம் சார்ந்த சட்ட நடவடிக்கைகள் எந்தளவில் முன்னேற்றமடைந்துள்ளன என்பது குறித்த விபரங்களை ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது. இதற்கு மேலதிகமாக, அந்தந்த மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தற்போது நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் நிலை குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிக்கைகள் அனைத்தும் அடுத்த மாதத்திற்குள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம் என்றார். இதேவேளை, 2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் 21 நாட்களுக்குள் நிதி ஆதாரங்கள் உள்ளிட்ட விரிவான பிரசார செலவின அறிக்கைகளை சமர்ப்பிக்க தவறியமைக்காக இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |