உலக நாயகன் பட்டத்தை துறந்த கமல் ஹாசன்!

11.11.2024 07:23:00

தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழும் கமல் ஹசான், ‘உலக நாயகன்’ உள்ளிட்ட அடைமொழிகளைத் துறக்கும் அறிவிப்பினை திடீரென வெளியிட்டுள்ளார்.

மேலும், தன்னை இனி ‘கமல்ஹாசன்’ அல்லது ‘KH’ என்று அழைத்தாலே போதும் என்று சினிமாத் துறையினர், ஊடகவியலாளர்கள், கட்சியினர், அரசியல்வாதிகள், இந்திய மக்கள் என அனைவருக்கும் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

என் மீது கொண்ட அன்பினால் ‘உலக நாயகன்’ உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள்.

மக்கள் கொடுத்து சக கலைஞர்களாலும், ரசிகர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன்.

உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்தும் இருக்கிறேன்.

உங்களின் பிரியத்தின் மீது எனக்கு மாறாத நன்றியுணர்வும் உண்டு.

சினிமாக் கலை, எந்தவொரு தனி மனிதனையும் விட பெரியது. அந்தக் கலையில் மேலும் மேலும் கற்றுக் கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன் தான் நான்.

பிறக் கலைகளைப் போலவே சினிமாவும் அனைவருக்குமானது; அனைவராலும் ஆனது. திறமையான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், நல்ல ரசிகர்கள் ஒன்றிணைந்துதான் சினிமா உருவாகிறது.

கலையை விட கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை. கற்றது கைமண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை கொண்டு உழைத்து உயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது.

அதனால்தான் நிறைய யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வர நேர்ந்தது.

மேலே குறிப்பிடதுபோன்ற பட்டங்களையும், அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதைக்குறைவும் வந்துவிடாத வண்ணம், அவற்றைத் துறப்பது என்பதே அது – எனக் கூறியுள்ளார்.

கடந்த நவம்பர் 7 ஆம் திகதி தனது 70 ஆவது வயதை பூர்த்தி செய்த கமல் ஹாசன் தற்சமயம், மணிரத்னம் இயக்கத்தில் 2025 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தி வெளிவரவிருக்கும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார்.

நடிகர் அஜித் குமார் சில ஆண்டுகளுக்கு முன்பு, 2021 ஆம் ஆண்டில் இதேபோன்ற கருத்தைத் தெரிவித்தார்.

அவரது ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் சினிமா சகோதரத்துவ உறுப்பினர்கள் தன்னை “தல” என்று குறிப்பிடுவதை நிறுத்துமாறும், அதற்கு பதிலாக அவரை அஜித் அல்லது ஏகே என்று அழைக்குமாறு கேட்டுக் கொண்டார்.