ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுப் போட்டிகளின் முடிவுகள் !
ஆண்டின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற, விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
உலகில் மிகவும் பழமையான இந்த தொடர், புற்தரையில் நடைபெறும் சிறப்பு மிக்க தொடராகும்.
ஆண்கள்- பெண்கள் என இரு பிரிவினருக்கும் நடைபெறும் இத்தொடரில், மொத்தம் நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதன்படி தற்போது நடைபெற்றுவரும் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு, காலிறுதிப் போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்,
1.ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், சுவிஸ்லாந்தின் ரோஜர் பெடரர், போலந்தின் ஹூபர்ட் ஹர்காசுடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஹூபர்ட் ஹர்காஸ் 6-3, 7-6, 6-0 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
2.ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், மேட்டியோ பெரெட்டினி, 6-3, 5-7, 7-5, 6-3 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.
3.ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் மார்டன் ஃபுசோவிக்ஸூடன் போட்டியிட்டார்.
எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், ஜோகோவிச், 6-3, 6-4, 6-4 நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
4.ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், கனடாவின் டேனிஸ் ஷபலோவ், ரஷ்யாவின் கரேன் கச்சனோவுடன் மோதினார்.
இப்போட்டியில், டேனிஸ் ஷபலோவ், 6-4, 3-6, 5-7, 6-1, 6-4 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.