உடனடியாக கொழும்பு மாநகரசபை நகர ஆணையாளரை பதவி நீக்கவும்
கொழும்பு மாநகரசபை நகர ஆணையாளரை உடனடியாக பதவி நீக்குமாறு கொழும்பு மாநகரசபை மேயர் ரோசி சேனாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு மாநகரசபை நகர ஆணையாளரின் செயற்திறமையற்ற நடவடிக்கைகள் மற்றும் ஊழல் மோசடிகள் காரணமாக மாநகர மக்களுக்கான சேவைகள் தடைப்பட்டு வருகின்றன. அதனால் இந்த நிலைமை தொடராமல் தடுப்பதற்காக, தகுதியான ஆணையாளர் ஒருவரை நியமிக்கவேண்டும் என்பது மாநகரசபையை பிரதி நிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களின் நிலைப்பாடாகும்.
அவர்களின் தீர்மானத்திற்கமைய தற்போதுள்ள கொழும்பு மாநகரசபை நகர ஆணையாளரை நீக்கிவிட்டு, தகுதியான ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் ரோசி சேனாநாயக்க கூறியுள்ளார்.
மேயர் ரோசி சேனாநாயக்க, மேல்மாகாண ஆளுநர் எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்கவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில்,
அரசியலமைப்பில் மாகாண ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்திற்கமைய, கொழும்பு மாநகரசபை நகர ஆணையாளர் பதவிக்கு கடந்த 2020.01.14 ஆம் திகதி உங்களால் நியமிக்கப்பட்ட ரோசினி திஸாநாயக்கவின் செயற்பாடுகளால் கொழும்பு மாநகரசபையின் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் தடைப்படாமல் இருப்பதற்கும் கொழும்பு மாநகரசபை காரியாலய உறுப்பினர்கள் தைரியமற்று அசெளகரியங்களுக்கு ஆளாவதை தடுப்பதற்காக, கொழும்பு மாநகரசபையின் அனைத்து உறுப்பினர்கள் சார்ப்பாக, அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களின் பெரும்பாலானவர்களின் கோரிக்கைக்கமைய, இதுதொடர்பாக கலந்துரையாட பல தடவைகள் சந்தர்ப்பம் கோரி இருந்தோம்.
என்றாலும் இதுவரை அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. என்றாலும் கடந்த இரண்டு வாரங்களாக நகர ஆணையாளர், தனது கடமை மற்றும் பொறுப்புக்களை தட்டிக்கழித்து, தான்தோன்றித்தனமாக மாநகர சபை அதிகாரிகளை மன அழுத்தங்களுக்கு ஆளாக்கி, சபையின் நடவடிக்கைகளுக்கு தடைகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதனால் நகரசபையின் பொறுப்புக்களை முறையாக நிறைவேற்ற தவறிய என்ற விடயத்தை அடிப்படையாகக்கொண்டு, அவருக்கு எதிராக முறையான ஒழுக்காற்று விசாரணை ஒன்றை மேற்கொள்ளவேண்டும். அத்துடன் நகர ஆணையாளர் பதவிக்கு தகுதியான அதிகாரி ஒருவரை நியமிக்கவும் விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் கொழும்பு மாநகரசபை போன்ற பாரிய நிறுவனம் ஒன்றின் நகர ஆணையாளர் பதவி பொறுப்புக்களை, அதுதொடர்பான அறிவு, அனுபவம் உள்ள ஒருவருக்கே பொறுப்புடன் செயலாற்ற முடியும் என்பது எமது நம்பிக்கை. அதனால் இந்த விடயங்களை கருத்திற்கொண்டு, நடைமுறைசாத்தியமான தீர்மானங்களை எடுக்க முடியுமான தகுதியான அதிகாரி ஒருவரை கொழும்பு மாநகர சபையின் நகர ஆணையாளர் பதவிக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அத்துடன் தற்போது அந்த பதவியில் இருக்கும் அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஊழல் மோசடி தொடர்பாக முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும். அதனால் அவை உடனடியாக நகர ஆணையாளர் பதவியில் இருந்து நீக்குமாறு மாநகரசை மேயர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்கள் சார்ப்பாக கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர் அதில் கூறியுள்ளார்.