இளம் வயதில் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் வீரர்

17.12.2022 10:59:39

கராச்சி டெஸ்டில் 18 வயது சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான ரேகன் அகமது களம் இறங்குவார் என இங்கிலாந்து அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ராவல்பிண்டி, முல்தானில் நடைபெற்ற போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

நாளை கராச்சியில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் தொடங்குகிறது. இதில் வெற்றி பெற்று பாகிஸ்தானை சொந்த மண்ணில் ஒயிட்-வாஷ் செய்ய இங்கிலாந்து ஆர்வமாக உள்ளது. நாளை தொடங்கும் கராச்சி டெஸ்டில் சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான ரேகன் அகமது களம் இறங்குவார் என இங்கிலாந்து அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. 18 வயது ஆகும் இவருக்கு கராச்சி டெஸ்ட் அறிமுக போட்டியாகும்.

இதன்மூலம் மிக இளம் வயதில் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் 1949-ல் டி.பி. க்ளோஸ் 18 வயது 149 நாட்கள் நிறைவடைந்த நிலையில் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆகியுள்ளார். ரேகன் அகமதுவுக்கு 18 வயது 126 நாட்கள் ஆகிறது.