உலகின் சிறந்த இந்திய பவுலிங் படை- சச்சின் பாராட்டு
‘‘இந்திய அணியின் தற்போதுள்ள பவுலிங் படை தான், உலகின் சிறந்தது,’’ என சச்சின் தெரிவித்தார்.
இங்கிலாந்து சென்ற இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. மழை காரணமாக நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆக, லார்ட்ஸ் டெஸ்ட் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்திய (364) அணியை விட முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி (391) 27 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்சில் 298/8 ரன் எடுத்து ‘டிக்ளேர்’ செய்த இந்தியா, தோல்வியில் இருந்து தப்பியது.
கடைசி 60 ஓவரில் 272 ரன் என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியை இந்திய ‘வேகங்கள்’ போட்டுத் தாக்க, 120 ரன்னுக்கு சுருண்டு, 151 ரன்னில் தோற்றது. இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றது. இதுகுறித்து இந்திய அணி ‘ஜாம்பவான்’ சச்சின் கூறியது:
லார்ட்சில் இந்திய துவக்க வீரர்கள் ரோகித் சர்மா, ராகுல் இணைந்து சிறப்பாக ரன் சேர்த்தனர். இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 28/3 ரன் என திணறிய போது, அடுத்த சில விக்கெட்டுகள் சரிந்திருந்தால் போட்டியின் நிலைமை மாறியிருக்கும். புஜாரா, ரகானே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர்.
இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் தவிர வேறு யாரும் சீரான ரன் குவிப்பை வெளிப்படுத்தவில்லை. முன்னணி பேட்ஸ்மேன்களை சிறப்பான பந்து வீச்சில் வெளியேற்றிய இங்கிலாந்து பவுலர்கள், இந்திய ‘டெயிலெண்டர்களை’ பயமுறுத்த ‘ஷார்ட் பிட்ச்’ பந்துகளை வீசினர். ஆனால் இது இந்திய வீரர்கள் துணிச்சலை துாண்டி விட, 100 ரன்னுக்கும் மேல் எடுக்க உதவியது. ஐந்தாவது நாள் காலையில் போட்டி இங்கிலாந்து கையில் இருந்து நழுவியது.