வரலாற்றில் முதல் தடவையாக அரச தலைவர் ஒருவரின் கண்காணிப்பு
கமத் தொழில் அமைச்சுக்கு சொந்தமான கொழும்பு 07, சேர் மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள கமநல அபிவிருத்தித் திணைக்களத்துக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (21) திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
“விவசாயச் சமூகத்தின் அனைத்து விவசாய நிலங்களின் நிலைபேறான அபிவிருத்தி” என்பதை நோக்காகக் கொண்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் செயற்பாடுகளானவை, “விவசாய நிலங்களிலிருந்து உகந்த உற்பத்தித்திறனைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் நிறுவன ரீதியான ஒத்துழைப்பு, சட்ட மற்றும் மேலாண்மை சேவைகளை வழங்குதல், காலத்துக்கு ஏற்ப பராமரிப்பதுமாகும்.”
அந்த நோக்கங்கள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்டறிவதே ஜனாதிபதி கண்காணிப்பு விஜயத்தின் நோக்கமாகும். திணைக்களத்தின் பல தசாப்தகால வரலாற்றில், அரச தலைவர் ஒருவர் விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.
பசுமை விவசாயம் மற்றும் நஞ்சற்ற உணவு உற்பத்தியே அரசாங்கத்தின் கொள்கை ஆகும். இம்முறை பெரும் போகத்தில், சேதனப் பசளை விநியோகம், பயன்பாடு மற்றும் விளைச்சல் என்பன தொடர்பில் ஆராய்ந்து, குறைபாடுகளைத் தீர்க்கும் வகையில் சிறு போகத்துக்கு தயாராக வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
34 அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சேதனப் பசளையை உற்பத்தி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனத்திலும் சேதனப் பசளையின் மூலம் பெற்ற விளைச்சல் மற்றும் முன்னேற்றம் தொடர்பாக அவதானிக்க வேண்டும். உயர் முன்னேற்றம் கண்ட நிறுவனங்களை ஊக்குவித்து, அந்த நிறுவனங்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
எதிர்வரும் காலங்களில், விவசாயிகளுக்கு அறிவூட்டுவதற்காக விவசாய ஆராய்ச்சி அதிகாரிகளுக்குத் தொழில்நுட்ப அறிவை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.
கடந்த இரண்டு வருடங்களில் கைவிடப்பட்ட வயல்களில் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளும் திட்டத்தின் மூலம், அநுராதபுரம், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் உள்ள அனைத்துத் தரிசு நெல் வயல்களிலும் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள முடிந்ததென, அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாடளாவிய ரீதியில் ஏனைய தரிசு வயல் நிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ளன. அவற்றைக் கைவிடுவதற்கான காரணங்களை ஆராய்ந்து, உரிமையாளர்கள் மற்றும் விவசாய அமைப்புக்கள் தலையிட்டு, அவற்றில் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
நெற்செய்கைக்கு பயன்படுத்த முடியாத நிலங்களை வேறு பயிர்களுக்குப் பயன்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
கமநல அபிவிருத்தித் திணைக்களம் மூலம் செயற்படும் 559 கிளைகளைக் கொண்ட கமநல வங்கிகள் ஊடாக விவசாயிகளின் வைப்புத் தொகைகளை ஏற்றுக்கொள்ளப்படுவதோடு கடன்களும் வழங்கப்படுகின்றன. இரண்டு இலட்சம் முதல் பத்து இலட்சம் ரூபாய் வரையில், போகங்கள் மற்றும் வருடாந்த முறைமையின் கீழ் கடன் வழங்கப்படுகின்றது. ஏனைய தரப்பினரிடமிருந்து விவசாயிகள் அதிக வட்டிக்குக் கடன் பெறுவதன் மூலம் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இதன் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு கமநல வங்கிகளைப் பலப்படுத்துவது மற்றும் விவசாயிகளிடமிருந்து அதிக விலைக்கு நெல்லைக் கொள்வனவு செய்யத் தலையிடுவது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.