சமுர்த்தியை விட மூன்று மடங்கு அதிக கொடுப்பனவு

11.05.2024 09:59:35

குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் அஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

 

சமுர்த்தியை விட மூன்று மடங்கு அதிக கொடுப்பனவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அந்த பயனாளிகள் குறித்த தகவல்களை கணினிமயமாக்கும் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், அதற்கமைய, அடுத்த ஆண்டு முதல் இந்த திட்டத்தை எளிதாக செயல்படுத்த முடியும். அதன்படி, கிராமத்திற்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை அதிகரித்து, பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.

அத்துடன், இந்த மக்களின் வாழ்வாதார வழிகளை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த வருவாய் கிராமத்தின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும்.

மேலும், கடந்த புத்தாண்டு காலத்தில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு இரண்டு மாதங்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தோம்.

இது இம்மக்களுக்கு மேலும் நிவாரணத்தை அளிப்பதுடன், சிறு அரிசி ஆலை உரிமையாளர்களிடம் இருந்து இந்த அரிசி கொள்வனவு செய்யப்பட்டதால் அவர்களுக்கும் ஓரளவு நன்மை கிடைத்துள்ளது.

கிராமத்தின் வளர்ச்சிக்காக இந்தப் பணி தொடர வேண்டும். அத்துடன், மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்கும் திட்டத்தையும் ஆரம்பித்துள்ளோம்.