வனத்துறை அதிகாரிகளைப் புலிக் கூண்டில் அடைத்த கிராம மக்கள்!

10.09.2025 14:23:06

கர்நாடக மாநிலத்திலுள்ள சாமராஜநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து வனத்துறை அதிகாரிகளை புலி கூண்டில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியைச் ஒட்டிய விவசாய நிலங்களில் புலிகள் நடமாட்டம் உள்ளதாகவும், கால்நடைகளை கொன்று வருவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

ஆனால் வனத்துறையினர் புலியை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்காமல், பெயளரவுக்கு கூண்டு வைத்துவிட்டு மட்டும் சென்றுவிடுவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் அங்கு ஆய்வுக்கு சென்ற வனத்துறையினரை, கிராம மக்கள் முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர்.

அப்போது முறையாக பதில் அளிக்கவில்லை என தெரிவித்து, வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பத்து பேரையும் புலியை பிடிக்க அமைத்த கூண்டில் கிராம மக்கள்  அடைத்துள்ளனர்.

இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் வனத்துறை அதிகாரிகளை  மீட்டதாகக்  கூறப்படுகிறது.

இதனிடையே வனப்பகுதியில் கடினமான சூழலில் பணிபுரியும் வனத்துறையினர் மீதான இந்த செயல், அவர்களது மன உறுதி, பணி சூழலை பாதிக்கும் என்று விமர்சனம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.