பிரதமரின் விஜயதசமி வாழ்த்துச் செய்தி!

15.10.2021 05:23:24

இலங்கை மாதாவின் பிள்ளைகளாகிய நாம் அனைவரும், சமய சக வாழ்வு என்னும் நீரோட்டத்துடன் கலந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். இவ்வேளையில், உலகமெங்கும் தீராத இடராக நிலவிக் கொண்டிருக்கும் கொவிட் – 19 தொற்று மக்களிடையே ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. இந்த இடர், ஆன்மிக பலத்தினாலும் சரியான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதாலும் வெல்லப்படக்கூடிய ஒன்று.

வழமையாக நவராத்திரி நோன்புக் காலம் இந்துக்கள் வாழ்கின்ற இடமெல்லாம் கோலாகலமாகக் கொண்டாடி மகிழும் ஒரு நோன்புக் காலமாகும். அந்த நிலையை மீளவும் நாம் பெற வேண்டும். அதற்கு இறை சக்தியே துணை என்ற நம்பிக்கையுடன் நம் பிரார்த்தனை அமையவேண்டும். அன்னை அம்பிகையின் அருள் வேண்டிய இந்நோன்பின் நிறைவு நாளாகிய விஜயதசமியையும் பக்தியோடும் சுகாதார நடைமுறைகளோடு கூடியதாயும் அனுஷ்டியுங்கள்.

என் அன்பிற்குரிய இலங்கைவாழ் இந்து மக்கள் அனைவருக்கும் உன்னதமான இந்த விஜயதசமி நன்னாளிலே நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதிலே மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

மனித குலத்திற்கு அடிப்படையான வீரம், கல்வி, செல்வம் ஆகிய மூன்றையும் அள்ளி வழங்குகின்ற மாபெரும் சக்திகளான துர்க்கை, சரஸ்வதி, லக்சுமி ஆகிய நம் தாய்த் தெய்வங்களுக்கு, நமது நன்றியையும் வணக்கத்தையும் வேண்டுதலையும் தெரிவிக்கும் விரதமாக நவராத்திரி விரதம் அமைகின்றது.

இந்நோன்பு நிறைவிலே வெற்றித் திருநாளாம் விஜயதசமித் திருநாளன்று ஆரம்பிக்கப்படும் நற்காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன், விஜயதசமி திருநாளை மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கின்றமை அதன் சிறப்பம்சமாகும்.

நம் அனைவரையும் காக்கின்ற இறைசக்தி இந்த துன்பத்தில் இருந்தும் நம்மைக் காத்தருளும் என்று நாம் அனைவரும் நம்புவோம். இறை நம்பிக்கையை வளர்த்துக்கொள்வோம். இந்நவராத்திரி நாளிலே நாடு நலம் பெற அனைவரும் ஒன்று சேர்ந்து பிரார்த்திப்போம்.

சிறப்பு வாய்ந்த இந்தப் புண்ணிய காலத்தில் அன்னையின் அருளால் இலங்கை வாழ் மக்கள் அனைவரும் அனைத்து நலன்களையும் வளங்களையும் பெற்றுச் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திட இறை ஆசி வேண்டி வாழ்த்துகிறேன்.