கைதிகளின் விடயத்தில் அரசாங்கம் பொறுப்புடையதாக உள்ளது – நாமல்

10.12.2021 06:18:50

பயங்கரவாத தடைச் சட்டத்துடன் தொடர்புடைய வழக்குகளைத் தாங்கள் உன்னிப்பாக ஆராய்வதுடன், அதில் பெரிய மாற்றங்கள் வரும் என நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சின் மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பில், அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, கைதிகளின் விடயத்தில், உரிய நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்கும், விடுதலை தொடர்பிலும் அரசாங்கம் பொறுப்புடையதாக உள்ளதென குறிப்பிட்டுள்ளார்.

அது ஒரு முறைமையிலானது என்பதை நாம் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

அதனை செய்வதற்கான சட்ட நடைமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.

நீதி அமைச்சர் அதற்காக செயற்படுகின்றார்.

முதல் முறையாக நாம் அதனை செய்ய முடியும்.அதனை செய்வோம்.

முன்னரும் அதனை நாம் செய்துள்ளோம்.அரசியல் ரீதியான அறிவிப்பை நாம் வெளியிட மாட்டோம்.ஏனெனில், அது எமது அரசியல் வாக்குறுதி அல்ல.

அரசியல் கட்சி என்ற அப்படையில், நீங்கள் எங்களுக்கு உதவி செய்வதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். அத்துடன், நீங்கள் ஒருபோதும் எங்களுக்கு உதவ மாட்டீர்கள்.

ஆனால், நாட்டின் பிரஜை என்ற அடிப்படையிலும், அரசாங்கம் என்ற அடிப்படையிலும் எங்களுக்கு பொறுப்பு உள்ளது.

அதனை நாங்கள் நிறைவேற்றுவோம் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் மூன்று விடயங்களின் அடிப்படையில் செயற்படுவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்த வழக்குகளை நாளாந்தம் விசாரிக்க வேண்டும் என பிரதம நீதியரசர் தெரிவித்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.