பொதுக் கட்டமைப்பாக போட்டியிடுவதா?
எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து, எதிர்வரும் இரு தினங்களுக்குள் தமது தீர்மானத்தை அறிவிப்பதாக தமிழ் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிவில் சமூகத்தினர் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியிடம் தெரிவித்துள்ளனர். |
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதுடன், எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனையடுத்து புதன்கிழமை பி.ப 3.00 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் கூடிய ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டணியின் ஒருங்கிணைப்புக்குழு, எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது பற்றி விரிவாக ஆராய்ந்தது. அதன் முடிவில் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் அக்கூட்டணியின் சார்பிலேயே களமிறங்குவதென உறுதியாகத் தீர்மானிக்கப்பட்டது. அதுமாத்திரமன்றி நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித்தேர்தலை இலக்காகக்கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிவில் சமூகப்பிரதிநிதிகளை உள்ளடக்கிய பொதுச்சபையினருடன் நேற்றை தினம் (26) கலந்துரையாடுவதற்கும், அவர்களுடைய நிலைப்பாடுகளைக் கேட்டறிவதற்கும் இதன்போது தீர்மானம் எடுக்கப்பட்டது. அதற்கமைய வியாழக்கிழமை (26) பி.ப 4.00 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் கூடிய ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், தமிழ் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிவில் சமூகப்பிரதிநிதிகளும் சுமார் 6.30 மணி வரை இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்தனர். அதனையடுத்து தமிழ் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா?, அவ்வாறு போட்டியிடுவதாயின் எந்தத் தரப்பின் சார்பில் போட்டியிடுவது?, போட்டியிடவில்லை எனின் தமிழ் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்வதா, இல்லையா? என்பன உள்ளடங்கலாக இதனுடன் தொடர்புடைய சகல விடயங்கள் குறித்தும் ஆராய்ந்து அறிவிப்பதற்கு 2 நாட்கள் கால அவகாசம் கோரியுள்ளனர். அதேவேளை ஜனாhதிபதித்தேர்தலில் களமிறக்கப்பட்ட தமிழ் பொதுவேட்பாளர் 'சங்கு' சின்னத்தில் போட்டியிட்ட நிலையில், அதே சின்னத்திலேயே பொதுத்தேர்தலிலும் போட்டியிடவேண்டும் என்ற யோசனை கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த பலரால் முன்வைக்கப்பட்டது. அதனையடுத்து அச்சின்னத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான அடுத்தகட்ட சட்ட நகர்வுகளை மேற்கொள்வதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. |