சமாதான நடைபயணத்திற்கு ஜனாதிபதி முழு ஆதரவு.

21.04.2026 08:49:54

இன்று (21) முதல் இலங்கையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும் 'சமாதான நடைபயணம்' (Walk for Peace) திட்டத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். 

இது குறித்து ஜனாதிபதி தனது X தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில், "அனைத்து மக்களிடையேயும் ழிப்புணர்வு, கருணை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இன்று ஆரம்பமாகும் 'சமாதான நடைபயணத்திற்கு' ஆதரவளிப்பதையிட்டு நான் பெருமையடைகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

"இந்த புனிதமான நடைபயணம் தம்புள்ளையில் ஆரம்பமாகி, சர்வக்ஞ தாதுக்கள் மற்றும் அரசமரக் கன்றுடன் நாடு முழுவதும் பயணிக்கும் வேளையில், எமது பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சமாதானம் மற்றும் கருணை ஆகிய நித்திய விழுமியங்கள் குறித்து மீண்டும் சிந்திக்குமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்" என்றும் அவர் மேலதிகமாகத் தெரிவித்துள்ளார். 

இந்த ஆன்மீக வேலைத்திட்டம் தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும், உலக சமூகத்திற்கு சமாதானம் குறித்த ஆழமான செய்தியை வழங்கவும் உதவும் என எதிர்பார்ப்பதாகக் கூறி ஜனாதிபதி அநுர திஸாநாயக்க தனது செய்தியை நிறைவு செய்துள்ளார். 

இதேவேளை, இந்த சமாதான நடைபயணத்திற்காக வியட்நாமிய வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் தலைமையிலான ஏழு பௌத்த தேரர்கள் இன்று (21) காலை இலங்கையை வந்தடைந்தனர். இந்த நடைபயணத்தில் பங்கேற்பதற்காக 'ஆலோகா' என்ற நாயும் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளது. 

சர்வதேச அளவில் புகழ்பெற்ற "Walk For Peace" சமாதான நடைபயணத் திட்டம் இன்று முதல் 28ஆம் திகதி வரை இலங்கையில் அரச அனுசரணையுடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர், அனுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதியிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட அரசமரக் கன்றுடன் இந்த நடைபயணத்தில் பங்கேற்கவுள்ளனர். 

ஜனாதிபதி செயலகம், 'Clean Sri Lanka' திட்டம், புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, முப்படைகள் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பல அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்த சமாதான நடைபயணத்திற்கு தமது பங்களிப்பை வழங்குகின்றன.