மாகாண சபைகளிலிருந்து பொலிஸ் அதிகாரங்களை நீக்க யோசனை
மாகாணசபைகளில் இருந்து பொலிஸ் அதிகாரங்களை நீக்குவதற்கான யோசனை ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில முன்வைத்துள்ளார்.
பாராளுமன்றத்தின் தனிநபர் பிரேரணையாக, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தின் மூலம் இதனை அவர் முன்வைத்துள்ளார்.
இன்றையதினம் இது குறித்து பாராளுமன்றத்தில் அறிவித்த அவர், அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை முன்வைப்பதாக தெரிவித்தார்.
குறித்த அரசியலமைப்புத் திருத்த யோசனையை ஶ்ரீ.ல.பொ.பெ. கட்சி பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய சுதந்திர முன்னணி கட்சி உறுப்பினருமான மொஹமட் முஸம்மில் வழிமொழிந்தார்.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்திற்கு அமைய, மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் 13ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தாதுள்ள நிலையில், குறித்த திருத்தத்தை அமுல்படுத்துமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி வரும் நிலையில், உதய கம்மன்பில, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் மூலம் அதில் உள்ள பொலிஸ் அதிகாரத்தை நீக்குவதற்கு யோசனை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த கம்மன்பில, மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என தெரிவித்தார்.
எதிர்காலத்தில் பிரிவினைவாத யுத்தம் நடந்தால், அந்த யுத்தம் வட மாகாண பொலிஸாருக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெறும் எனவும், இரண்டுமே உத்தியோகபூர்வ படைகளாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இலங்கைக்கு எதிராக செயல்படும் நாடுகளால் குறித்த பிரிவினைவாத ஆயுத இயக்கத்திற்கு அல்லது வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வடக்கு பொலிஸ் இராணுவத்திற்கு வெளிப்படையாக, தயக்கமின்றி உதவிகளை வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு (2/3) பெரும்பான்மை அவசியமாகும்.
அந்த வகையில் குறித்த திருத்தத்தை நிறைவேற்ற முடியுமா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கம்மன்பில, இது பாராளுமன்றத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் எனவும், பாராளுமன்றத்திற்குள் தேசபக்தர்கள் அதிகமாக உள்ளனரா அல்லது பிரிவினைவாதிகள் அதிகமாக உள்ளனரா என்பதை அது சோதிக்கும் என குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.