“முதல்வர் ஜோசப் விஜய்க்கு நன்றி”.
|
தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என்ற முதல்வர் விஜய்யின் அறிவிப்புக்கு நடிகர் அஜித் குமார் நன்றி தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் இன்று 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். விளையாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்தவும், தமிழக இளைஞர்களிடையே மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான அதிகரித்து வரும் ஆர்வத்தை ஊக்குவித்து, அவர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கி தமிழகத்தை சர்வதேச அளவிலான மோட்டார் ஸ்போர்ட்ஸின் முக்கிய மையமாக உருவாக்கவும், தமிழகத்தில் ஒரு புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்தார். |
|
மேலும், "இந்த நகரத்தில் சர்வதேசத் தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தயத்தடம் மற்றும் அதற்கான நவீன உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்பட்டு ஃபார்முலா 1, ஃபார்முலா 2, ஃபார்முலா 3, ஃபார்முலா 4 போன்ற சர்வதேசத் தரத்திலான போட்டிகள் நடத்துவதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும். இளைஞர்களின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திறமைகளைக் கண்டறிந்து, பயிற்சி மற்றும் போட்டி வாய்ப்புகள் வழங்கி, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வீரர்களை உருவாக்குவதுடன், விளையாட்டுச் சுற்றுலாவையும் மேம்படுத்தும் வகையில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமையும்" என்றும் முதல்வர் விஜய் தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் இந்த அறிவிப்புக்கு நடிகர் அஜித் குமார் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் இளைஞர்களை விளையாட்டுத் துறையின் பக்கம் ஈர்த்து, அவர்களிடம் உள்ள திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை முறையாக வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகள் மிகுந்த பாராட்டுக்குரியவை. குறிப்பாக, தமிழ்நாட்டில் பிரத்யேகமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தற்போது மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஈடுபட்டு வரும் ஒருவனாக, விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் புகழ்பெற்ற வார்த்தைகளை சற்றே மாற்றி இவ்வாறு கூற விரும்புகிறேன்: "தமிழ்நாடு அரசின் ஒரு சிறிய அடி, இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறைக்கு ஒரு மாபெரும் பாய்ச்சல்" முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யின் அனைத்து முயற்சிகளும் பெரும் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் அனைத்து விளையாட்டு முன்னெடுப்புகளும் மாபெரும் வெற்றி பெறட்டும்" எனத் தெரிவித்துள்ளார். |