கலந்துரையாடல்களில் இனிமேல் பயனில்லை : சி.வி.விக்னேஸ்வரன்!
சிங்களத் தலைவர்களுடன் பல வருடங்களாக கலந்துரையாடிய போதிலும் இறுதியில் தமிழ் சமூகத்திற்கு எதுவும் கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரப் பகிர்வு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் சென்றிருந்த போதும் ஜனாதிபதி பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் ஊழல் ஒழிப்புச் சட்டம் தொடர்பிலேயே கலந்துரையாடினார் என்றும் அவர் அதிருப்தி வெளியிட்டார்.
அதன்பின்னர் தமிழ் அரசியல் தலைவர்கள் அதிகாரப் பகிர்வையே விரும்புவதாக வலியுறுத்திய போது அதற்குத் தேவையான கட்டளைச் சட்டங்களை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார் என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் 13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அதிகாரங்கள் மேலும் பலப்படுத்தப்படும் என தான் ஜனாதிபதியிடம் வலையுறுத்தியதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.