கரையை கடந்தது ஃபெஞ்சல் புயல்

01.12.2024 09:14:20

வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கரையை கடந்துள்ளது. வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் சனிக்கிழமை நள்ளிரவில் மகாபலிபுரம் - புதுச்சேரி இடையே கரையை கடந்துள்ளது. இதனையடுத்து, புதுச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது.

  

அத்துடன் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாலை 5:30 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய ஃபெஞ்சல் புயல் கிட்டத்தட்ட 7 மணி நேரங்களுக்கு பிறகு 11:30 மணியளவில் கரையை கடந்துள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.