சாட்சியாளர்களை அச்சுறுத்தும் புலனாய்வுப் பிரிவினர்!

26.04.2026 14:20:09

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ள இரகசியங்களை அம்பலப்படுத்திய முக்கிய சாட்சியாளர்கள் தற்போது கடத்தப்படுதல், சித்திரவதை செய்யப்படுதல் மற்றும் மரண அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதலானது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினால் மாத்திரமே திட்டமிடப்பட்டது என்ற பிம்பத்தை உருவாக்குவதற்காக, மட்டக்களப்பு சிறையில் தடுப்புக்காவலில் இருந்த சிவனேசதுரை சந்திரகாந்தனை பேராசிரியர் ரோஹன் குணரத்ன 2015 முதல் 2021 வரையான காலப்பகுதியில் மூன்று முறை சந்தித்துள்ளதாக சி.ஐ.டி மன்றுக்குத் தெரிவித்துள்ளது.

இவர்கள் இருவரும் இணைந்து தாக்குதல் குறித்து எழுதிய புத்தகங்கள், உண்மையான சூத்திரதாரிகளை மறைக்கும் முயற்சியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் வவுணதீவில் இரு பொலிஸார் கொல்லப்பட்டமை சஹ்ரான் குழுவினரால் செய்யப்பட்டிருந்தாலும், அது முன்னாள் தமிழீல விடுதலைப் புலி உறுப்பினர்களால் செய்யப்பட்டது என திசைதிருப்பப்பட்டிருந்தது.

இது குறித்த தகவல்களை வழங்கிய சாட்சியாளரை, இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் தொடர்பு கொண்டு, நாட்டை விட்டு வெளியேற பணம் தருவதாக ஆசை காட்டியுள்ளார். அதற்கு மறுப்புத் தெரிவித்தால் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைப்போம் என மிரட்டியதுடன், மோட்டார் சைக்கிளில் அவரைப் பின்தொடர்ந்து அச்சுறுத்தியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சல்லேவின் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் குறித்துத் தகவல் வழங்கிய சாட்சியாளரின் வீட்டிற்கு, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதில் ஒருவர் நீர்கொழும்பு இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சஹ்ரானின் தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களுக்கு ஆயுதங்களை வழங்கிய இராணுவப் புலனாய்வு அதிகாரி குறித்த தகவலை வெளியிட்ட சாட்சியாளருக்கு, மட்டக்களப்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்களால் நேரடி மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாகத் தடுப்புக்காவலில் வைத்து சுட்டுக்கொன்று விடுவோம் என மிரட்டி, அவரிடமிருந்து பணம் மற்றும் பொருட்கள் பறிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்த இராணுவப் புலனாய்வு அதிகாரி பற்றி சாட்சியமளித்த நபர், போலி முகநூல் கணக்கு மூலம் வரவழைக்கப்பட்டு வாழைச்சேனை பகுதியில் வைத்து கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலில் ஒரு இராணுவப் புலனாய்வு அதிகாரிக்குத் தொடர்பிருப்பதாக பாதிக்கப்பட்டவரின் தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த விடயங்களை ஆராய்ந்த கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார, நிலைமை மிகவும் பாரதூரமானது என எச்சரித்தார். சாட்சியாளர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க நீதிமன்ற உத்தரவுக்காகக் காத்திருக்கத் தேவையில்லை என்றும், சட்டமா அதிபர் திணைக்களம் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரம் பெற்றுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.