ரின் இலக்கம் இல்லா விட்டால் 6 மாதம் சிறையா?

20.05.2026 08:48:11

பலவந்தமான வகையில் வரி கொள்கையை அமுல்படுத்த முடியாது. ஜனநாயக ரீதியிலான வரி கொள்கை தான் நிலையானதாக அமையும். வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை பெற்றுக்கொள்ளாவிடின் 06 மாத காலம் சிறைச் செல்ல நேரிடும் என்று உண்ணாட்டரசிறைச் (திருத்தச் ) சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது டயங்கள் திருத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்ற உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சுதந்திரத்துக்கு பின்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் நாட்டை முன்னேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளன. ஆனால் மக்கள் விடுதலை முன்னணி தான் அனைத்து அரசாங்கங்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி போராட்டங்களில் ஈடுபட்டது. 1994 ஆம் ஆண்டு சந்திரிக்காவின் அரசாங்கத்தில் ஒன்றிணைந்தார்கள். 2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டு வந்து அரச வருமானத்தை வீழ்ச்சிக்கு கொண்டுச் சென்று நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளினார்கள்.இது தான் 75 ஆண்டுகால சாபம்.இந்த சாபத்தில் மக்கள் விடுதலை முன்னணிக்கு பிரதான பங்கு உள்ளது.

பலவந்தமான வகையில் வரி கொள்கையை அமுல்படுத்த முடியாது. ஜனநாயக ரீதியிலான வரி கொள்கை தான் நிலையானதாக அமையும்.வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை பெற்றுக்கொள்ளாவிடின் 06 மாத காலம் சிறைச் செல்ல நேரிடும் என்று உண்ணாட்டரசிறைச் (திருத்தச் ) சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. .இது முற்றிலும் தவறானது. இந்த சட்டமூலத்தில் பல விடயங்கள் திருத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளோம்.

பலவந்தமான முறையில் வரியை அறவிடுவதற்கு சட்டமியற்றும் அரசாங்கம் 4 கம்பனிகளுக்கு வரிச்சலுகை வழங்கியுள்ளது. இது எந்தளவுக்கு நியாயமானது. முறைமை மாற்றம் குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளுக்கு அமைய நடுத்தர மக்களின் வாழ்க்கையை நெருக்கடிக்குள்ளாக்கி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைக்கு அமைவாகவே இந்த அரசாங்கம் செயற்படுகிறது. மின்சாரம் மற்றும் எரிபொருள், எரிவாயு விலைகள் நியாயமற்ற வகையில் அதிகரிக்கப்படுகின்றன. மக்களின் பக்கம் இருந்துக் கொண்டு அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டும். அரசாங்கத்தின் சகல தீர்மானங்களும் மக்களுக்கு எதிரானதாகவே மாறியுள்ளது என்றார்.