ஒரு முக்கிய கட்டத்தை பொருளாதார பிரச்சினைகள் எட்டியுள்ளது
அரசாங்கத்தின் பொருளாதார பிரச்சினைகள் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், கடந்த சில வாரங்களாக நாட்டில் அமெரிக்க டொலர் இருப்பு படிப்படியாக குறைந்து வருவதாகவும் கூறினார்.
இதேவேளை உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களில் கடுமையாக அதிகரித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார்.
ஆகவே மாத இறுதிக்குள், அரசாங்கம் உள்நாட்டு எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும் அல்லது எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரியைக் குறைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் நிறைவில் 4.8 பில்லியன் டொலர் வௌிநாட்டு இருப்பு இருந்ததாகவும் தற்போது அது குறைவடைந்திருப்பதாகவும் மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன் கடந்த வாரம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.