அதிமுகவினரை வைத்து விஜய் போட்ட பிளான்!
|
அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் நேற்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். தவெகவில் இணைந்ததற்கு அவர் சொன்ன காரணம் கவனம் பெற்றுள்ளது. தவெக தலைவர் விஜய், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை பற்றி உயர்வாகப் பேசி வருவதால் தவெகவில் இணைந்ததாக கூறியுள்ளார் கு.ப.கிருஷ்ணன். திருச்சி மாவட்டம் குழுமணி பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன். |
|
1972ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.கவில் ஆரம்ப காலத்திலேயே இணைந்து, களப்பணிகளால் மக்கள் மத்தியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் அ.தி.மு.க. ஜானகி ஜெயலலிதா அணிகளாகப் பிரிந்தபோது, ஜெயலலிதா அணியில் உறுதியாக நின்றார். 1991ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்று, ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வேளாண்மைத் துறை அமைச்சராகப் பதவியேற்றார். பின்னாளில் கருத்து வேறுபாடுகளால் அ.தி.மு.கவிலிருந்து விலகிய அவர், 2001ஆம் ஆண்டு 'தமிழர் பூமி' என்ற புதிய கட்சியை தொடங்கினார். ஆனால் அந்த முயற்சி நீடிக்கவில்லை. தொடர்ந்து தே.மு.தி.கவில் இணைந்து அரசியல் பயணத்தைத் தொடர்ந்த அவர், பின்னர் மீண்டும் தாய் கழகமான அ.தி.மு.கவிற்கு திரும்பினார். 2011 சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓ.பி.எஸ் தலைமையிலான அணியில் இணைந்து செயல்பட்ட அவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அரசியலில் அமைதி காத்தார். இந்நிலையில், நேற்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக செயல் வீரர்கள் மாநாட்டின்போது, கட்சித் தலைவர் விஜய் முன்னிலையில் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தவெகவில் இணைந்துள்ளது அக்கட்சிக்கு மேலும் பலம் கொடுப்பதாக அமைந்துள்ளது. தவெகவில் இணைந்தது ஏன் என்பது பற்றிப் பேசியுள்ள கு.ப. கிருஷ்ணன்,"அதிமுக ஒன்றிணைய பல முயற்சிகள் நடந்தாலும் எதுவும் நிறைவேறவில்லை. இப்போது அந்தக் கட்சி பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களைக்கூட பயன்படுத்தத் தயங்குகிறார்கள். அண்மையில் மதுராந்தகத்தில் நடந்த என்.டி.ஏ பொதுக்கூட்டத்திலும் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை பயன்படுத்தவில்லை. ஆனால் விஜய் அவர்கள் எங்கள் தலைவர்களை மேடையில் உயர்த்திப் பேசுகிறார். அவர்களது ஆட்சியை மீண்டும் தருவேன் என உறுதி கூறுகிறார். எனக்கு பதவி ஆசை இல்லை. மக்கள் இருக்கும் பக்கம்தான் என் பக்கம். விஜய்யுடன் பணியாற்றுவதில் பெரும் மகிழ்ச்சி. 2026ல் ஆட்சி மாற்றம் உறுதி. தமிழக முதலமைச்சராக விஜய் வருவதை யாராலும் தடுக்க முடியாது. களம் தான் முடிவை சொல்லும்" என்று தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய், தான் பங்கேற்கும் கூட்டங்களில் எல்லாம் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பற்றி பேசி வருகிறார். பொதுக்கூட்டங்களில் எம்ஜிஆரை குறிப்பிட்டு பேசுவதோடு, அவர் பாடல்கள், வசனங்களையும் கூறி வருகிறார். இது அதிமுக தொண்டர்களை தன் பக்கம் நோக்கி ஈர்க்கும் முயற்சி எனக் கூறப்பட்டது. விஜய்யின் இந்த முயற்சிகளுக்கு பலன் கிடைத்திருப்பதையே அண்மைக்கால நிகழ்வுகள் காட்டுகின்றன. அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஜேசிடி பிரபாகர் உள்ளிட்ட அதிமுக முன்னாள் நிர்வாகிகள் பலர் தவெகவில் சேர்ந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனும் விஜய்யுடன் இணைந்துள்ளார். அதிமுகவினரை தன் பக்கம் ஈர்க்கும் விஜய்யின் முயற்சி ஓரளவுக்கு பலனையே தந்திருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். |