சலுகைகள், உதவிகளை ஐரோப்பிய ஒன்றியம் இடைநிறுத்த வேண்டும்!
|
தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெறும் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருப்பதை நிறுத்தி, இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜி.எஸ்.பிளஸ் வரிச்சலுகை போன்ற அனைத்து உதவிகளையும் சலுகைகளையும் ஐரோப்பிய ஒன்றியம் உடன் இடைநிறுத்த வேண்டும் என்று வடக்கு கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
|
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை (21) செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிட்டதன் பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவர் யோ. கனகரஞ்சினி செயலாளர் சி.ஜெனிதா ஆகியோரை சந்தித்தனர். இதன்போது அவர்களால் கையளிக்கப்பட்ட மகஜரிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்படுவது, அடிப்படை கொள்கையின்படி, நேரடிக் குற்றவாளிகள்; அக்குற்றங்களை உத்தரவிட்டவர்கள், வழிவகுத்தவர்கள் அல்லது மறைத்தவர்கள்; சம்பந்தப்பட்ட இராணுவ மற்றும் அரசியல் கட்டளையிட்டவர்கள் உள்ளிட்ட அரசின் பொறுப்புகளை அடையாளம் காணும் திறனுடைய குற்றவியல் விசாரணையைத் தூண்ட வேண்டும். மாறாக, இலங்கை இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகவும் தொடர்ச்சியாக மனிதப் புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ளபோதும் தண்டனையற்ற தன்மையையே வெளிப்படுத்தியுள்ளது. இதுவரை, மனிதப்புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் இறப்புகளுக்கு எந்தவொரு முழுமையான நீதித்துறை செயன்முறையும் பொறுப்பை நிறுவவில்லை. இதுவரை மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான மனிதப் புதைகுழி விசாரணைகளிலிருந்து அர்த்தமுள்ள வழக்குகள் எதுவும் தொடரப்படவில்லை. உள்நாட்டு அல்லது சர்வதேச சுயாதீன நீதித்துறை பொறிமுறையின் மூலமும் எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. இதன்நேரடி விளைவாக, ஆயுத மோதல் முடிந்து பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகியும் குடும்பங்களுக்கு உண்மை, நீதி மற்றும் நிவாரணம் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகிறது. சாட்சிகளின் வாக்குமூலம், உள்ளுர் அறிவு மற்றும் முந்தைய பகுதி விசாரணைகள் மூலம் அடையாளம் காணப்பட்ட பல இடங்கள் முற்றிலும் தோண்டப்படாமல் உள்ளன அல்லது சர்வதேச தடயவியல் தரநிலைகளுக்குக் குறைவாகவே விசாரிக்கப்பட்டுள்ளன. மண்டைதீவு, செம்மணி, கொக்குத்தொடுவாய், மன்னார், முல்லைத்தீவு மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், சாட்சிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளால் அடையாளம் காணப்பட்ட மேலதிக இடங்கள் உட்பட அடையாளம் காணப்பட்ட, சந்தேகிக்கப்படும் அனைத்து மனிதப் புதைகுழி இடங்களையும் சுயாதீன சர்வதேச கண்காணிப்பின் கீழ் உடனடியாக தடயவியல் மதிப்பீடு, அகழ்வாராய்ச்சி செய்யுமாறு சர்வதேச சமூகத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் அழைப்பு விடுக்கிறது. அத்துடன், எந்தவொரு அகழ்வாராய்ச்சியும் குறைந்தபட்சம் சர்வதேச தடயவியல் தரநிலைகளுக்கு இணங்க மனித எச்சங்களை மீட்டெடுத்தல் மற்றும் பாதுகாத்தல்;, தடயவியல் மற்றும் டி.என்.ஏ பகுப்பாய்வு மூலம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணுதல்;, சாத்தியமான இடங்களில், இறப்பிற்கான காரணம் மற்றும் முறையைத் தீர்மானித்தல்;, உள்நாட்டு அல்லது சர்வதேச நீதித்துறைக்கு உட்பட்ட எதிர்கால குற்றவியல் நடவடிக்கைகளில் பயன்படுத்துவதற்கான சான்றுகளை சேகரித்தல் மற்றும் பாதுகாத்தல்;, மற்றும் புதைக்கப்பட்ட முறை மற்றும் சூழ்நிலைகளால் நிரூபிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் பிற சர்வதேசக் குற்றங்களின் வடிவங்களை முறையியலாக ஆவணப்படுத்துதல் ஆகியவற்றை முன்னெடுக்க வேண்டும். உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கு வெறும் அகழ்வாராய்ச்சியை விட மேலான செயற்பாடுகள் தேவைப்படுகிறது. அவற்றுக்கு சுயாதீன விசாரணை, உண்மையான சர்வதேச தடயவியல் நிபுணத்துவம், கடுமையான செயற்கைக்கோள் படப்பகுப்பாய்வு, நம்பகமான டி.என்.ஏ அடையாளங்காணல், சான்றுகளை கவனமாகப் பாதுகாத்தல், குற்றவாளிகள் மீது வழக்குத் தொடருதல் மற்றும் ஒவ்வொரு மட்டத்திலும் கட்டளைப் பொறுப்பை நேர்மையாக ஆய்வு செய்தல் ஆகியவை அவசியமாகின்றன. அத்தோடு, ஐரோப்பிய ஒன்றியமானது, ஈழத்தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெறும் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருப்பதை நிறுத்தி, இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜிஎஸ்.பி போன்ற அனைத்து உதவிகளையும் சலுகைகளையும் இடைநிறுத்த வேண்டும். செயல்பாட்டாளர்கள், தமிழ் மனித உரிமைப் பாதுகாவலர்கள், தமிழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவையும் உதவியையும் வழங்க வேண்டும். அனைத்து பொருளாதார உதவிகளையும் கடுமையான மோதல் உணர்திறன், மனித உரிமைகள் வழிகாட்டுதல்களுக்கு இலங்கை இணங்குவதை உறுதி செய்ய வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாட்டுத் தூதரகங்கள் மற்றும் பிற மேற்கத்திய இராஜதந்திர தூதரகங்களுக்கும் தீவின் வடக்கு-கிழக்கில் உள்ள தமிழ் பாதிக்கப்பட்டவர்கள், எஞ்சியவர்கள், காணாமல் போனவர்களின் குடும்பங்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுக்கும் இடையே வழக்கமான, கட்டமைக்கப்பட்ட தொடர்பை நிறுவ வேண்டும் என்றுள்ளது. |