வட மாகாண ஆளுநரின் அலுவலகத்தை அரசாங்கம் பயன்படுத்துகிறது.

13.06.2026 12:07:00

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை விரைவாக நடத்துவதற்கு மறுப்பு தெரிவிக்கும் அதேவேளை, வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பணிகளை முடக்குவதற்கும் செயற்பாட்டக்கு வட மாகாண ஆளுநரின் அலுவலகத்தை அரசாங்கம் பயன்படுத்துகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டினார்.

    

 

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற அமர்வின்போது நிலையியற் கட்டளை 27 / 2 இன் கீழ் கேள்விகளை முன்வைத்து மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி ஜி.அலெக்ஸ்ராஜா, 27.05.2026 ஆம் திகதியன்று, பதுளை மாவட்ட சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே இவர் யாழ்ப்பாணத்திற்கு நியமிக்கப்பட்டிருந்த போதிலும்,இப்போது பதுளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுளள்ளார். இந்த இடமாற்ற முடிவின் பின்னணியில் ஏதோவொரு வெளிப்புறக் காரணிகள் செல்வாக்கு செலுத்தியுள்ளன என்று உணர்கின்றோம்.

இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் 30.05.2026 ஆம் திகதியன்று, ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில், நீதிபதியின் இடமாற்றத்திற்கு வழிவகுத்த செயல்முறைகளில் வட மாகாண ஆளுநர் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரின் தலையீடுகள் மற்றும் தேவையற்ற அழுத்தங்கள் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நீதிபதி அலெக்ஸ்ராஜா பருத்தித்துறை நகர சபைக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட விசாரணையை இடைநிறுத்தி இரண்டு ரிட் வழக்குகளில் இடைக்கால உத்தரவுகளை வழங்கியிருந்தார். அத்துடன், அவர் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய போது ஆசிரியர் ஒருவரின் இடமாற்றத்தையும் இடைநிறுத்தியிருந்தார். இந்த உத்தரவுகள் அனைத்தும், எதிர்மனுதாரராக பெயரிடப்பட்டிருந்த ஆளுநருக்குப் பாதகமானவையாக அமைந்திருந்தன.

இந்த மூன்று வழக்குகளின் வழக்கு ஆவணங்களின் பிரதிகள், இடமாற்றம் உத்தரவிடப்படுவதற்கு முந்தைய நாள் பிரதம நீதியரசரால் முறையற்ற முறையில் கோரப்பட்டதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையைச் சேர்ந்த தவிசாளர்களைக் கொண்ட பருத்தித்துறை நகர சபை மற்றும் சாவகச்சேரி நகர சபை ஆகியவை, மத்திய அரசாங்க கட்சியின் விருப்பங்களையும் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக கடந்த சில மாதங்களாக ஆளுநரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

உள்ளூராட்சி நிறுவனங்கள் மீதான விசாரணை அதிகாரம், நகரசபை கட்டளைச் சட்டத்தின் பிரிவு 184 இன் படி மாகாண உள்ளூராட்சி அமைச்சரிடமே உள்ளது. இந்த அரசாங்கம் மாகாணத்திற்கான தேர்தல்களை நடத்த மறுக்கும் அதே வேளையில், எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாணத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களின் பணிகளை முடக்குவதற்கு வட மாகாண ஆளுநரின் அலுவலகத்தை அரசாங்கம் பயன்படுத்தி வருகிறது.

இது தொடர்பில் சில கேள்விகளை எழுப்புகின்றேன். அதாவது, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியால் ரிட்/006/2026 மற்றும் ரிட்/008/2026 ஆம் இலக்க வழக்கு எண்களில் வழங்கப்பட்ட சில உத்தரவுகள் தொடர்பாக, வட மாகாண ஆளுநர் நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பிய விடயங்கள் நீதிக்கட்டமைப்பின் நிர்வாகத்தில் தேவையற்ற தலையீடாகும் என்பதை நீதி அமைச்சர் ஏற்றுக்கொள்வாரா?

ஆம் எனின், நீதிக்கட்டமைப்பின் நிர்வாகத்தில் தேவையற்ற தலையீட்டை மேற்கொண்டமைக்காக ஆளுநருக்கு எதிராக அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் மற்றும் இந்த நிலைமையைச் சரிசெய்வதற்கு அவர் எடுக்க உத்தேசித்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பதை நீதி அமைச்சர் இந்தச் சபைக்கு அறிவிப்பாரா? என்றார்