சுயாதீன விசாரணையை தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும்!

17.09.2025 08:20:00

இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு நாம் சுயாதீன விசாரணையைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கவேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் சம்மர் லீ தெரிவித்துள்ளார்.

யாழ். செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான ராஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் டெபோரா ரோஸ் ஆகியோர் ஏற்கனவே தமது எக்ஸ் தளப்பக்கப் பதிவுகளின் ஊடாக தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருந்தனர்.

குறிப்பாக பாதிக்கப்பட்ட தரப்பினரால் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன வலியுறுத்தப்படுவதை ஆதரிப்பதாகவும், அவை உறுதிப்படுத்தப்படவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் சம்மர் லீ, அதில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

செம்மணியில் அடையாளங்காணப்பட்ட மனிதப்புதைகுழியில் 140 க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகளுடன் குழந்தையின் பால்போத்தல், பாடசாலை புத்தகப்பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மை என்பன கண்டறியப்பட்டுள்ளன.

இவை தொடர்பான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நோக்கி நகர்வதற்கு நாம் சுயாதீன விசாரணையைத் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருக்கவேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.