.jpg)
தமிழ்த் தேசிய பேரவை!
வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், குருந்தூர் மலை விவகாரம், தையிட்டி விகாரை விவகாரம் என்பன தொடர்பில் கொழும்பிலுள்ள சர்வதேச இராஜதந்திரிகளிடம் எடுத்துரைத்திருக்கும் தமிழ்த்தேசிய பேரவையின் பிரதிநிதிகள், இவ்விடயங்களில் சர்வதேச சமூகம் தலையீடு செய்து, உரிய அழுத்தங்களை வழங்கி, தீர்வைப் பெற்றுத்தரவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். |
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில் உருவாகியிருக்கும் தமிழ்த்தேசிய பேரவையில் அங்கம்வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (14) இடம்பெற்றது. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்குடன் மு.ப 9.00 மணிக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திலும், இலங்கைக்கான இந்தியத் துணை உயர்ஸ்தானிகர் பாண்டேவுடன் மு.ப 10.15 மணிக்கு இந்திய உயர்ஸ்தானிகராலயத்திலும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரான்ஞ்சேவுடன் மு.ப 11.30 மணிக்கு கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்திலும், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷுடன் பி.ப 3.00 மணிக்கு கனேடிய உயர்ஸ்தானிகராலயத்திலும் நடைபெற்றது. இச்சந்திப்புக்களில் தமிழ்த்தேசிய பேரவையின் சார்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன், தமிழ்த்தேசியக்கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிறிகாந்தா, தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசனும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் கலந்து கொண்டிருந்தனர். இராஜதந்திரிகளுடனான இச்சந்திப்புக்களின்போது பிரதானமாக 3 விடயங்கள் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டது. முதலாவதாக வடமாகாணத்திலுள்ள உரிமைகோரப்படாத சுமார் 6000 ஏக்கர் காணிகள் தொடர்பில் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதியிடப்பட்டு வெளியான வர்த்தமானி அறிவித்தல் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன், அதனை அரசாங்கம் உடனடியாக மீளப்பெறவேண்டியதன் அவசியம் தொடர்பிலும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக வெறுமனே 3 மாதங்களுக்குள் காணிகள் தொடர்பான உரித்தை நிரூபிப்பதில் தமிழ்மக்கள் முகங்கொடுத்திருக்கும் நடைமுறைச்சிக்கல்கள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது. அதேபோன்று காணி உரித்தை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் உரிமையாளர்களிடம் இல்லாத நிலையில், அதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அக்காணிகளை சுவீகரிப்பதை நோக்காகக்கொண்டே அரசாங்கம் அவசர அவசரமாக இவ்வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருப்பதாகவும் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் சுட்டிக்காட்டப்பட்டது. இரண்டாவதாக கடந்த ஆட்சியின்போது குருந்தூர் மலையில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த 79 ஏக்கர் காணிக்கு அப்பால், விகாரையை நிர்மாணிப்பதற்கு மேலும் 325 ஏக்கர் காணி தேவைப்படுவதாக அதனுடன் தொடர்புடைய பௌத்த பிக்கு கோரிக்கைவிடுத்திருந்தார். இருப்பினும் அக்காணிகள் மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்காகவே பயன்படுத்தப்படவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டதன் பின்னர், கடந்த வாரம் அக்காணியில் விவசாயத்தில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் இராஜதந்திரிகளிடம் எடுத்துரைக்கப்பட்டதுடன், இவ்விடயத்தில் ஜனாதிபதி மட்டத்தில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னரும் கூட, சம்பந்தப்பட்ட பௌத்த தேரர் உள்ளிட்ட தரப்பினர் அதற்கு முரணாக செயற்படுவது பற்றி சுட்டிக்காட்டப்பட்டது. மூன்றாவதாக தையிட்டியில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் விகாரை குறித்து இராஜதந்திரிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அத்தோடு ஏனைய பகுதிகளில் நிர்மாணிக்கப்படும் சட்டவிரோத கட்டடங்கள் எவ்வாறு அகற்றப்படுகின்றதோ, அதுபோன்று இவ்விகாரையும் அகற்றப்படவேண்டியதன் அவசியம் தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டது. மேலும் இவ்விடயங்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் தலையீடு அவசியம் எனவும், இவைகுறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஆராயப்படவேண்டும் எனவும் இராஜதந்திரிகளிடம் வேண்டுகோள்விடுக்கப்பட்டது. |